
சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு தி.மு.க.வில் கடந்த 17ஆம் தேதி முதல் நேர்காணல் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று துணைமுதலமைச்சர் உதயநிதி, அமைச்சர் சேகர்பாபு முதலியவர்களிடம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் நேர்காணல் செய்தனர்.
சும்மா நாடகம் என எதிர்க்கட்சியினரின் கிண்டலுக்கு இடையே, நேர்காணலைப் பற்றிக் கூறிய உதயநிதி, ”என்னுடைய தொகுதியைப் பற்றி கேட்டார்கள். எஸ்.ஐ.ஆர்.இல் நீக்கப்பட்டவர்கள் பற்றியும் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் விவரங்கள் பற்றியும் தொகுதிக்குச் செய்தவை பற்றியும் கேட்டார்கள். போய்ட்டு வாங்க சொல்றோம்னு சொன்னாங்க” என்று செய்தியாளர்களிடம் கூறினார்.
மற்ற அமைச்சர்களிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது. இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவிடமும் நேற்று நேர்காணல் நடத்தப்பட்டது.
கடைசி நாளாக இன்று விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. திருச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் இன்று நேர்காணல் நடத்தப்படுகிறது. இதில் நேர்காணல் செய்த குழுவில் உள்ள அமைச்சர் நேருவிடமும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் நேர்காணல் நடத்தினார்.
முதலமைச்சர், துணைமுதலமைச்சர், அமைச்சர்கள் நேரு, இ.பெரியசாமி, தங்கம் தென்னரசு ஆகியோரின் தொகுதிகளில் வேறு யாரும் விருப்ப மனுகூட தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.