எனக்குப் பின்னால் முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருக்கிறாரா? என்ற கேள்விக்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மோடி பிரதமராக வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயக கூட்டணிக்குச் சென்றோம். துரோகம் புரிந்த பழனிசாமி எங்களை சந்திக்கவே தயங்கும்போது, கூட்டணிக்கு எப்படி வருவார். அகங்காரத்தில் பேயாட்டம் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி.
ஓபிஎஸ் உடன் பேசத் தயார் என்று நயினார் நாகேந்திரன் சும்மா சொல்கிறார். இபிஎஸ் போதும் என நயினார் நாகேந்திரன் நினைக்கிறார். அவர் பழனிசாமியை தூக்கிப்பிடித்ததே நாங்கள் கூட்டணியிலிருந்து விலகக் காரணம். பழனிசாமியைத் தவிர வேறு யார் மீதும் வருத்தமில்லை.
எனக்காக தேனி தொகுதியை விட்டுக்கொடுத்தவர் ஓ. பன்னீர்செல்வம். அவருக்கு நான் பேசாமல் வேறு யார் பேசுவது? விரைவில் செங்கோட்டையனை நான் சந்திப்பேன். நீங்கள் நினைக்காத கூட்டணி அமையும்.
என் பின்னால் அண்ணாமலை இருப்பதாகவும் செங்கோட்டையன் பின்னால் பாஜக இருப்பதாகவும் கூறுவதில் உண்மையில்லை. தவெகவுடன் நாங்கள் செல்லவுள்ளதாக கூறுவது ஊடக வியூகம். ஆனால், விஜய் மீது பொறாமை தேவையில்லை.” என்றார்.