“ஆன்மிகம் அன்புக்கா… வம்புக்கா…?”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

“அன்பு செய்ய சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை, சில கும்பல் வம்பு செய்வதற்காகப் பயன்படுத்துகிறார்கள்.” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சமத்துவ நடைபயணத்தை இன்று திருச்சியில் தொடங்கி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: ”முதுமையை முற்றிலுமாக தூக்கி எறிந்துவிட்டு இந்த நடைபயணத்தை தொடங்கியிருக்கிறார் அண்ணன் வைகோ. இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப்பழக்கத்தை முற்றிலும் நாம் ஒழிக்க வேண்டும். போதையின் பாதையிலிருந்து இளைஞர்களைக் காக்க வேண்டும். அதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதனால் ஓரளவு பயன் கிடைத்துள்ளது. போதைப் பழக்கத்துக்கு அடிமையானர்கள் அதன் பாதிப்பு உணர்ந்து அதை கைவிட வேண்டும். உடன் இருப்பவர்கள் அவர்களைத் திருத்த வேண்டும். போதைப்பழக்கம் என்பது மிகப்பெரிய நெட்வொர்க். அதை ஒழிக்க மத்திய - மாநில அரசு சேர்ந்து செயல்பட வேண்டும்.

கடந்த சில மாதங்களில் வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிருந்து மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான போதை மாத்திரைகளை பிடித்துள்ளோம். இந்த கடத்தலில் சம்பந்தப்பட்டவர்கள் மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா அரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

போதை ஒழிப்பு என்பது சமூகத்தின் கூட்டுப்பொறுப்பாக இருக்க வேண்டும். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள் பொறுப்புடன் தங்கள் படைப்புகளை உருவாக்க வேண்டும். போதைப்பொருளுக்கு எதிரான விழிப்புணர்வை அனைவரும் பரப்ப வேண்டும்.

சாதி, மத மோதல் பிரச்னைகளும் நாட்டின் மிக முக்கிய பிரச்சினைகளாக உள்ளன. ஒன்றி அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் வெறுப்பு பேச்சை பேசுவதும், இரு பிரிவினருக்கும் இடையே மோதலை உண்டு பண்ணும் வகையிலும் செயல்படுகிறார்கள். தனிப்பட்ட அவர்களின் கொள்கைக்கு நாட்டின் ஒருமைப்பாட்டைக் குலைக்க நினைக்கிறார்கள்.

சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழால் நடந்த கலவரங்கள் குறித்து அனைவருக்கும் தெரியும். சில ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டில் இந்த பிரச்னை இருந்ததா. அன்பு செய்ய சொல்லித்தர வேண்டிய ஆன்மிகத்தை, சில கும்பல் வம்பு செய்வதற்காக பயன்படுத்துகிறார்கள். மது போதையும் அதைவிட மோசமான மதவாத போதையையும் தமிழ்நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்க நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.

அண்ணன் வைகோ அவர்கள் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டு இனி நடைபயணம் மேற்கொள்ள கூடாது.” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com