
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்தது உண்மை தான் என்று காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கூட்டணி, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
காங்கிரஸ் கட்சி, திமுக கூட்டணியில் அங்கம் வகித்தாலும், காங்கிரஸின் ஒரு பிரிவினர் தவெகவுடன் கூட்டணி வைக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது. கரூர் சம்பவத்தின்போது விஜய்யிடம் ராகுல் காந்தி தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசிய நிலையில், விஜய்யை சந்தித்து பிரவீன் சக்கரவர்த்தி பேசியிருந்தார்.
இந்த நிலையில், இன்று காலை சென்னையில் இருந்து கோவைக்கு செல்வதற்காக விமான நிலையத்துக்கு வருகைதந்த பிரவீன் சக்கரவர்த்தி, “உத்தரப் பிரதேசத்துடன் தமிழகத்தை ஒப்பிடவில்லை என்றும் தமிழகத்தின் நிதி நிலைமை குறித்து ரிசர்வ் வங்கி கூறிய கருத்துகளையே முன்வைத்தேன்.” என்றவரிடம் விஜய்யை சந்துத்து பேசியுள்ளீர்கள். கூட்டணி குறித்து பேசப்பட்டதா? மீண்டும் அவரை சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறதா? என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், விஜய்யை சந்தித்தேன் அவ்வளவுதான்.”என்றார்.
இதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்த பிரவீன் சக்கரவர்த்தி, “தவெக தலைவர் மிகப்பெரிய அரசியல் சக்தியாக மாறிவிட்டார். மக்கள் நடிகர் விஜய்யைப் பார்க்க வரவில்லை, தலைவர் விஜய்யைப் பார்க்கதான் வருகின்றனர்.
கூடுதல் தொகுதிகள், ஆட்சியில் பங்கு என்பது காங்கிரஸ் தொண்டர்களின் கோரிக்கை. அதிகாரத்தில் பங்கு என்பது காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்துக்காக வைக்கப்படும் கோரிக்கை. பலவீனமான நிலையில் சென்றுகொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நேரம் வந்துவிட்டது” எனத் தெரிவித்துள்ளார்.