“பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது” – நடிகர் சத்யராஜ்

நடிகர் சத்யராஜ்
நடிகர் சத்யராஜ்
Published on

“தந்தை பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. அந்த நண்பர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், 'தந்தை பெரியாருடைய திராவிட கருத்தியலில் உள்ள சமூக நீதி கோட்பாட்டின் உண்மையான விளக்கத்தை பொது மேடைகளில் சொல்லி அதில் இந்தமாதிரி குறைகள் இருக்கிறது, நாங்கள் வந்தால் இதையெல்லாம் மாற்றிக்காட்டுவோம் என்று பேசுவதில் ஒரு நியாயம் இருக்கிறது.

ஆனால், ஏதோ அரசியல் பண்ண வேண்டும் என்பதற்காக பெரியாருக்கு எதிராக புலம்புபவர்களைப் பார்த்து கோவமே வரவில்லை, பரிதாபமாகத்தான் இருக்கிறது. நூறு வருஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவரே பேச முடியாதல்லவா, அவ்வப்போது புதுமுகங்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சி உட்பட பல கட்சிகள் திராவிட கருத்தியலை ஏற்றுக் கொண்டுள்ளன.

ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பெரியார் குறித்து பேசியிருக்கிறார். கேரள முதல்வர் பினராயி விஜயன், வைக்கம் போராட்ட வீரரான பெரியாருக்கு மிகப்பெரிய விழா எடுத்திருக்கிறார்.

பல கட்சிகளின் பெயரிலேயே திராவிடம் என்ற சொல் இருக்கிறது. பாமக நிறுவனர் ராமதாஸ், விசிக தலைவர் தொல். திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், தவெக தலைவர் விஜய் ஆகியோர் பெரியாரை கொள்கை தலைவராகக் கொண்டுள்ளனர்.

திராவிட கருத்தியல் மீது விமர்சனம் இல்லை என்பதை அறிவோம். தந்தை பெரியாருக்கு எதிராக புலம்பும் நண்பர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில், கடலூரில் சீமான் செய்தியாளர் சந்திப்பின்போது பெரியார் மற்றும் திராவிடம் பற்றி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com