60 ஆண்டு உறவு அம்போ... திமுக கூட்டணியை முறித்த முஸ்லிம் லீக்!

முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம்
முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம்
Published on

தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகுவதாக முஸ்லிம் லீக் கட்சி அதிகாரபூர்வமாகத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுக்குழு கூட்டம் 20.06.2026 சனிக்கிழமை காலை 11.00 மணியளவில், பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற்றது.

மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம்.முஹம்மது அபூபக்கர், மாநில முதன்மைத் துணைத் தலைவர் எம். அப்துல் ரஹ்மான், மாநில துணைத் தலைவ்ர் கே.நவாஸ் கனி எம்.பி., தமிழக அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான், இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்ற கட்சித் தலைவர் எஸ்.எஸ்.பி.சையத் பாரூக் பாஷா எம்.எல்.ஏ., உள்ளிட்ட மாநில நிர்வாகிகள், 53 மாவட்டங்களில் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் என 480 பேர் பங்கேற்றனர்.

இதில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இரண்டு தீர்மானங்களில் ஆட்சியில் பங்கேற்றது, கூட்டணி தொடர்பாகக் கூறப்பட்டிருந்தது.

“ தமிழ்நாட்டில் பாஜகவின் மறைமுக ஆட்சி தமிழகத்தில் ஏற்பட்டு விடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் 05.05.2026 அன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீனுக்கு அனுப்பிய கடிதத்தில், தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைவதற்கு இ.யூ.முஸ்லிம் லீகின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து இருந்தார். அத்துடன் த.வெ.க.வின் முன்னணி நிர்வாகிகள் இ.யூ.முஸ்லிம் லீக் தலைமை அலுவலகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கேட்டு தொடர்ந்து வேண்டுகோள் விடுத்தனர்.

மஹல்லா ஜமாஅத் நிர்வாகிகள், சமுதாய புரவலர்கள், இ.யூ.முஸ்லிம் லீகின் மாநில, மாவட்ட மற்றும் பிரைமரி நிர்வாகிகள், சர்வ சமய தலைவர்கள் அதிகப்படியான சட்டமன்ற உறுப்பினர்களை வென்றுள்ள த.வெ.க.வின் ஆட்சி அமைவதற்கு இ.யூ.முஸ்லிம் லீக் ஆதரவு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து வந்தனர்.

இந்நிலையில், 09.05.2026 அன்று சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீகின் உயர்மட்டக் குழு கூட்டத்தில் த.வெ.க. ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு அளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரிடம் ஆதரவுக் கடிதம் வழங்கப்பட்டது. 10.05.2026 அன்று தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து, அரசில், இ.யூ.முஸ்லிம் லீக் இடம்பெற வேண்டும் என த.வெ.க. சார்பில் தொடர்ந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டு வந்தது.

இ.யூ.முஸ்லிம் லீக் தேசிய அரசியல் ஆலோசனைக் குழு தலைவர் பானக்காடு செய்யது சாதிக் அலி ஷிகாப் தங்ஙள், தேசிய பொதுச் செயலாளர் பி.கே.குஞ்ஞாலிக் குட்டி எம்.எல்.ஏ. ஆகியோரும் அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் அங்கம் வகிக்க வேண்டும் என தொடர்ந்து ஆலோசனை வழங்கி வந்தனர்.

அதன்படி, 21.05.2026 அன்று சென்னையில் நடைபெற்ற இ.யூ.முஸ்லிம் லீக் மாநில நிர்வாகக் குழு அவசரக் கூட்டத்தில் விரிவாக கருத்து பரிமாற்றம் நடைபெற்று, தமிழ்நாடு அரசில் இ.யூ.முஸ்லிம் லீக் அங்கம் வகிப்பது என்றும், ஓர் அமைச்சர் பதவி கொடுப்பதாகக் கூறியதன் அடிப்படையில் பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஷாஜஹானின் பெயர் பரிந்துரை செய்யப்பட்டது.” என்றும்,

“தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பை மதித்து த.வெ.க. ஆட்சி அமைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரவு அளித்ததோடு, விஜய் தலைமையிலான அரசில் அங்கம் வகித்து வருகின்றது. இன்றுள்ள அரசியல் சூழலில் தி.மு.க. கூட்டணியில் நாம் தொடர்ந்து பயணிக்க இயலாது.

இடைத்தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு செய்வதென இக்கூட்டம் தீர்மானிக்கிறது.” என்றும் தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.

பொதுக்குழுவுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காதர் மொகிதீன், தி.மு.க.வுடன் 60 ஆண்டு கால கூட்டணி வைத்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

அந்த 60 ஆண்டு காலக் கூட்டணியை அம்போனு விட்டுட்டுப் போறீங்களே என்கிறபடிதான், தி.மு.க. கூட்டணி ஆதரவாளர்கள் அதிருப்தியுடன் கேட்கிறார்கள்.

ஏற்கெனவே, காங்கிரசும் வி.சி.க.வும் இப்படி கூட்டணியை விட்டுவிட்டதாகக் கூறிவிட்டன.

இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் அண்மையில் தாங்களும் தி.மு.க. கூட்டணியில் இல்லை எனக் கூறியுள்ளன.

சட்டமன்றக் கட்சிகளில் ம.தி.மு.க.வின் நிலை குறித்து வரும் 27ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் முதன்மைச் செயலாளர் துரை வைகோ கூறியிருக்கிறார்.

சிறு கட்சிகளைத் தவிர பெரும்பாலான கூட்டணிக் கட்சிகள் தி.மு.க.வைக் கைகழுவிவிட்டுப் போயிருப்பது தி.மு.க. தொண்டர்களிடமும் உற்சாகத்தைக் குறைத்திருக்கிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com