மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்தவுடன் நாடாளுமன்றத் தொகுதி வரையறையில் பூதாகாரப் பிரச்சினைகள் வரவிருப்பதாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
”இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கையை நிர்ணயிப்பதற்கு 1976ஆம் ஆண்டில், தொகுதி வரையறை ஆணைக்குழு நிறுவப்பட்டது.
அது வெளியிட்ட ஆணைப்படி, இந்திய மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்று நிர்ணயிக்கப்பட்டது.
இது 25 ஆண்டுகளுக்குத் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.
2001இல் தொகுதி வரையறை ஆணைக்குழு ஓர் அறிவிப்பை வெளியிட்டது. இனிவரும் காலத்தில், தொகுதிகளின் எண்ணிக்கை, மக்கள்தொகை எண்ணிக்கைக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படும் என்ற அறிவிப்பையும் செய்தது.
இதன்படி, வரும் 2025ஆம் ஆண்டில் - அதாவது 2001லிருந்து அடுத்த 25வது ஆண்டில் - மக்கள்தொகை அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகள் உருவாக்கப்பட வேண்டும்.
2021இல் நடந்துமுடிந்திருக்க வேண்டிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு கோவிட் தொற்றுப் பரவல் காரணமாக, ஒத்திப்போடப்பட்டது.
அது நடத்தப்பட்ட பிறகு, நாடாளுமன்றத் தொகுதி வரையறைக் குழு, மக்கள்தொகைக்கு ஏற்றபடி, நாடாளுமன்றத் தொகுதிகளை நிர்ணயிக்க இருக்கிறது.
கணக்கெடுப்பை 2024இல் நடத்த இயலாது; 2025இல் நடத்தி முடிக்கும் வாய்ப்பு இருக்கிறது. 2025இல் மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்துவிட்டால், நாடாளுமன்றத் தொகுதி வரையறையும் தொடங்கப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தச் சூழலில்தான் ஆந்திரப்பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு, தன் மாநிலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் குழந்தைகள் பெற்று வளர்க்க வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அதைப்போலவே, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு மக்கள் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்ந்திட முன்னோர்கள் கூறியதை மக்களுக்கு நினைவுப்படுத்தி இருக்கிறார்.
மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரிக்க, வரையறைக் குழு முனையும்போது, தங்களின் மாநிலங்களின் தொகுதிகள் எண்ணிக்கை குறையாமல் இருப்பதற்காக முன்யோசனையாக முதல்வர்கள் பேசி வருகிறார்கள் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
இந்தியாவின் வட மாநிலங்களில் குடும்பக்கட்டுப் பாட்டுத் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என்பதால், மக்கள்தொகை வட மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது என்பது உலகறிந்த உண்மையாகும்.
அதே சமயத்தில், தென் மாநிலங்களில் குறிப்பாக தமிழகத்தில் கல்வியில் மிகப்பெரும் வளர்ச்சி ஏற்பட்டுள்ள காரணத்தால், மக்கள் மத்தியில் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டம் எல்லா மாவட்டங்களிலும் உள்ள மக்கள் மத்தியில் ஒரு கட்டுப்பாட்டோடு பின்பற்றப்பட்டுள்ளன என்பது கண்கூடு. இதனால், தென் மாநிலங்களில் மக்கள்தொகை கட்டுக்குள் வந்திருக்கிறது. ஆனால், வட மாநிலங்களில் கட்டுக்கடங்காமல் பெருகி இருக்கிறது.
இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதி வரையறைகளை மக்கள்தொகைக்கு ஏற்ப செய்தால், வட மாநிலங்களிலிருந்து அதிகப்படியிலான உறுப்பினர்கள் வருவார்கள்; தென் மாநிலங்களில் இருந்து இப்போதுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கைகூட குறைந்துவருகிற நிலைமை உருவாகலாம்.
இந்தச் சூழ்நிலையை மனத்திற்கொண்டே சந்திரபாபு நாயுடுவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மக்கள்தொகைப் பிரச்சினையை எழுப்பி இருக்கிறார்கள். இந்தப் பிரச்சினை மிகப் பெரும் விவாதத்தை நாட்டில் ஏற்படுத்தும் என்பதை எதிர்பார்க்கலாம்.
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோடி உருவாக்கித் திறந்தார். அதில் 850-க்கும் மேலாக உறுப்பினர் இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன எனப் பத்திரிகைகள் எழுதின; நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543தானே. ஏன் இந்த 850க்கும் அதிகமான ‘சீட்டுகள்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டது!
ஒரே தேர்தல் ஒரே நாடு என்றதொரு புதிய சுலோகத்தை பா.ஜ.க. அரசு எழுப்பியது. அதன் அர்த்தமும் இப்போது விளங்க ஆரம்பித்திருக்கிறது.
* உத்தரப்பிரதேசம் 80 தொகுதிகளிலிருந்து 133 தொகுதிகள் ஆகும்.
* பீகார் 40 தொகுதிகளிலிருந்து 72 ஆகும்.
* மராட்டியம் 48 தொகுதிகளிலிருந்து 71 ஆகும்.
* இராஜஸ்தான் 25 தொகுதிகளிலிருந்து 46 ஆகும்.
* மத்தியப்பிரதேசம் 29 தொகுதிகளிலிருந்து 49 ஆகும்.
* குஜராத் 26 தொகுதிகளிலிருந்து 41 ஆகும்.
* அரியானா 10 தொகுதிகளிலிருந்து 17 ஆகும்.
* சத்தீஸ்கர் 11 தொகுதிகளிலிருந்து 17 ஆகும்.
இப்படி வட மாநிலங்களின் தொகுதிகள் கூடிவிடும்.
அதேநேரத்தில் கேரளத்தில் 20இலிருந்து 20தான் இருக்கும்.
தமிழ்நாட்டில் 39இலிருந்து 43ஆக மட்டும் இருக்கும்.
வரவிருக்கும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மூலம் ஏற்படப்போகும் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காணும் என்பதற்கு காலந்தான் பதில்சொல்ல வேண்டும்.” என்று காதர் மொகிதீன் கூறியுள்ளார்.