
ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு திமுக ஆட்சியில் எந்த பாகுபாடும் காட்டவில்லை என்று கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இத்தகைய அரசியல் மாண்பையே தான் விரும்புவதாக தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் மூன்றாம் பட்டமளிப்பு விழாவில், மாணவ, மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்தில் படித்து, பட்டம் பெறும் உங்களை மாணவ, மாணவியர் என்று சொல்வதைவிட பட்டம் பெற்ற கலைஞர்கள் என்று அழைப்பதுதான் பொருத்தமாக இருக்கும்! அந்த வகையில், பல்வேறு துறைகளில் மிளிரப் போகும் கலைஞர்களுக்கு என்னுடைய உளம் கனிந்த வாழ்த்துகள்! அதிலும், அதிக பெண்கள் பட்டம் பெற்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சியை எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த பட்டமளிப்பு விழாவிற்கு முதலமைச்சராக, பல்கலைக்கழக வேந்தராக மட்டுமல்ல, நானும் நாடகம் மற்றும் திரைத்துறையில் இயங்கும் கலைஞன் என்ற அந்த முறையில் இங்கு வந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
அதிலும், நம்முடைய மதிப்பிற்குரிய அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கும் – மதிப்பிற்குரிய ஓவியர் சந்துரு அவர்களுக்கும் மதிப்புறு முனைவர் பட்டம் வழங்குவதில் நான் பெருமை அடைகிறேன்.
அதிலும், பல்துறை வித்தகரான அண்ணன் சிவக்குமார் அவர்களுக்கு இந்த டாக்டர் பட்டம் மிக மிக பொருத்தமான ஒன்று! அண்ணன் சிவக்குமார் அவர்கள், புகழ்பெற்ற நடிகர் மட்டுமல்ல; நல்ல ஓவியர்! சிறந்த சொற்பொழிவாளர்! முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு நெருக்கமானவர்! தலைவரே அவரது வீட்டிற்குச் சென்று, ஒன்றரை மணிநேரம் அவரது ஓவியங்களை பார்த்து ரசித்து இருக்கிறார்! அதேபோல், எல்லா முதலமைச்சருடனும் பழகியவர் நம்முடைய சிவகுமார் அவர்கள்! எம்.ஜி.ஆருக்கு நெருக்கமானவர்!
இந்த பல்கலைக்கழகம் பெயர்பெற்றிருக்கக்கூடிய அம்மையார் ஜெயலலிதா அவர்களுடன் பழகி, அவருடைய நட்பை பாராட்டியவர்! இப்போது எனக்கும் ஒரு அண்ணனாக இருக்கிறார், நம்முடைய சிவகுமார் அவர்கள்!
நம்முடைய அரசு பொறுப்பேற்றதும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக தம்பி சூர்யா – கார்த்தியுடன் வந்து ஒரு கோடி ரூபாய் கொடுத்தவர் நம்முடைய சிவகுமார் அவர்கள். தான் கற்ற நல்ல பண்புகளை – ஒழுக்கத்தை – யோகா – உடற்பயிற்சி போன்ற உடல்நலத்திற்கு தேவையானவற்றின் அவசியத்தை தொடர்ந்து இன்றைக்கு வரைக்கும் அவர் சொல்லிக்கொண்டு இருக்கிறார்! இங்கே முனைவர் பட்டம் பெற்றபோது சொன்னார், தலைவர் கலைஞர் அவர்களிடம் பெறுவது போன்று மகிழ்ச்சி அடைகிறேன் என்று சொன்னார். அவருக்கு முனைவர் பட்டம் வழங்கியது எனக்கு தான் பெருமை; அவருக்கு பெருமை இருக்கிறதோ இல்லையோ எனக்கு பெருமை.
அதேபோல், மதிப்பிற்குரிய ஓவியர் சந்துரு அவர்கள், ஒரு முற்போக்குச் சிந்தனையாளர் அவர்! தொல்லியல் துறையில் இவர் பணியாற்றியபோது, சித்தன்னவாசல், தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் ஓவியங்களை நகலெடுத்து, அருங்காட்சியகப் பணிகளை மேற்கொள்வது என்ற முயற்சியில் சிறப்பாக செயல்பட்டார்! இப்போது நீங்கள் பார்க்கலாம் – சென்னை ரவுண்டானாக்களில் இருக்கக்கூடிய பல சிலைகள் இவர் உருவாக்கியதுதான். சிற்பம் – கவிதை – ஓவியம் என்று பன்முகத்தன்மை வாய்ந்த இவர், திறமையான பல கலைஞர்களையும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்! அப்படிப்பட்ட இவர்களுக்கு, என் கையால் டாக்டர் பட்டம் கொடுப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!
என்னைப் பொறுத்தவரை, அம்மையார் ஜெயலலிதா அவர்களின் பெயர் சூட்டப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், இதற்கு நாங்கள் எந்தப் பாகுபாடும் காட்டவில்லை; இந்தப் பட்டமளிப்பு விழாவை கூட நாங்கள் புறக்கணிக்கவும் இல்லை! இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 2021-க்குப் பிறகு, இந்த யூனிவர்சிட்டியை இன்னும் செழுமையாக வளர்த்திருக்கிறோம்! இதுதான், நான் நிறுவ நினைக்கும் அரசியல் மாண்பு! இந்த அரசியல் மாண்பு நடுவில் இல்லாமல் சென்றிருந்தாலும், எதிர்காலத்தில் நிச்சயமாக எப்போதும் தொடர வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
2021-க்குப் பிறகு, இந்த யூனிவர்சிட்டியில் நிறைய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். புதிய பாடத் திட்டங்களை அறிமுகம் செய்து, நல்கை நிதியை உயர்த்தி – ஆராய்ச்சி மையம் – நூலகம் – கற்றல் மேலாண்மை ஆகிய பல அமைப்புக்களை உருவாக்க ஒரு கோடி ரூபாய் வழங்கினோம்!
கடந்த ஆண்டு மார்ச் 8-ஆம் நாள், 15 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய கட்டடத்தை திறந்து வைத்தேன். இதற்கு துணையாக இருக்கும் இணை வேந்தர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களை நான் வாழ்த்துகிறேன்!” என்று பேசியவர் நான்கு புதிய சிறப்புகளை வெளியிட்டார்.
அவை,
• நாட்டுப்புற கலையில், குறிப்பாக ‘பறையாட்டம்’ கலை வல்லுநரான வேலு ஆசான் என்கிற பத்மஸ்ரீ வேல்முருகன் அவர்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாட்டின் மரபு கலைகளான கிராமிய கலைகள் மற்றும் நாட்டுப்புற கலைகளை வளர்க்கும் வகையில், மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் வட்டத்தில் இருக்கும் வலையங்குளத்தில், கிராமியக் கலைப் பயிற்சிப் பள்ளி அமைக்க நிலம் ஒதுக்கீடு அரசின் சார்பில் வழங்கப்படும்.
• உங்கள் பல்கலைக்கழகத்தில், பல்வேறு இசை, நிகழ்த்து கலை மற்றும் கவின் கலைகளில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள். கவின்கலையில், புதியதாக கலை பாதுகாப்புப் பிரிவில் முதுகலை பட்டப்படிப்பு 2026-2027-ஆம் கல்வி ஆண்டிலிருந்து அறிமுகப்படுத்தப்படும். இந்த புதிய முதுகலை பட்டப்படிப்பின் மூலமாக, மாணவர்கள் தங்களின் திறமைகளை மேம்படுத்திக் கொள்ளவும், அதிக வருமானம் ஈட்டவும் வழிவகை செய்யப்படும்.
• இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்திறன் மற்றும் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஊதியம் மற்றும் நிர்வாக செலவினங்களுக்காக தற்போது வழங்கப்படும் 3 கோடி ரூபாய் மானியத் தொகையை 5 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
• “நான் முதல்வன்” திறன் சார்ந்த படிப்புகள் இசை மற்றும் கவின் கலை பயின்று வரும் மாணவர்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும். இந்தத் திட்டத்தின் மூலமாக, மாணவர்களுக்கு ஆங்கில உரையாடல் பயிற்சி மற்றும் டிஜிட்டல் திறன் சார்ந்த படிப்புகள் வழங்கப்படும்.
இப்படி பல்வேறு வகைகளில் உங்களுக்கு ஆதரவாக இருந்து, உங்களை அடுத்தகட்டத்திற்கு அழைத்துச் செல்ல நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் தயாராக இருக்கும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்!
அதேபோல், இப்போது ஏ.ஐ மூலமாக பலரும் ஓவியங்கள் – பாடல்கள் – இசை என்று உருவாக்குகிறார்கள். அதனால், நமக்கான வாய்ப்புகள் குறைந்துவிடுமோ என்று நீங்கள் யாரும் கவலைப்படக் கூடாது. எவ்வளவுதான் டெக்னாலஜி வளர்ந்தாலும், அதனால் மனிதர்களின் சிந்தனையை வெல்ல முடியாது! தொழில்நுட்பத்தை நம்முடைய பலத்திற்கு நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்!
வித்தை தெரிந்தவர்களிடம் இருந்தால் தான் ஆயுதத்திற்கு மதிப்பு! அதனால், நீங்கள் தொடர்ந்து டெக்னாலஜியை கற்றுக்கொண்டே இருக்க வேண்டும்! நம்முடைய கலைஞானி கமல்ஹாசன் கூட சமீபத்தில் அமெரிக்காவிற்கு சென்று, ஏ.ஐ. தொழில்நுட்பத்தை படித்துவிட்டு வந்திருக்கிறார். இந்த ஆர்வம் எல்லோருக்கும் வர வேண்டும். ஆன்லைனில் தேடினாலே நிறைய கோர்ஸ் கிடைக்கும். அதனால் தொடர்ந்து கற்றுக்கொள்ளுங்கள்!
உங்களின் அறிவை – திறமையை – உங்கள் கலைகளில் வெளிப்படுத்துங்கள்! கலைகள்தான், மொழியை – பண்பாட்டை – இனத்தைக் காக்கும்! இப்போதெல்லாம், இளைஞர்கள் நிறைய ஃபோன் பார்க்கிறார்கள். சிலர் போதை பொருட்கள் பயன்படுத்துகிறார்கள். உடல்நலனை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். இதற்கெல்லாம் உங்கள் கலைகள் மூலமாக நீங்கள் நல்ல தீர்வை கொண்டு வர வேண்டும். ” என்றார்.