ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை என்ற நூலின் இந்தி மொழிபெயர்ப்பு நூலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை சார்பில் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக அறக்கட்டளையின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய ‘சப்யாதா கி யாத்ரா: சிந்து சே வைகை’ (ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை) இந்தி மொழிபெயர்ப்பு நூலினை வெளியிட, தலைமைச் செயலாளர் முருகானந்தம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகமும் இந்தி மொழியின் முன்னணி பதிப்பாளரான வாணி பிரகாஷனும் இணைந்து இந்த நூலை வெளியிட்டுள்ளனர். சிந்து சமவெளி நாகரிகம் விட்ட இடமே தமிழின் சங்கம் தொட்ட இடம் என்பதை இந்த நூலில் ஆர். பாலகிருஷ்ணன் சான்றுகளுடன் நிறுவியிருக்கிறார்.
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் செயல்படுத்தி வரும் திசைதோறும் திராவிடம், இந்த நூல் வெளியீடு வழியாக இந்தி மொழிக்கும் விரிவாகியிருக்கிறது. இதன்மூலம், 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்தி மொழியின் முன்னணிப் பதிப்பு நிறுவனமான வாணி பிரகாஷன் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துடன் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா ஆகியோர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர்." இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரு பண்பாட்டின் பயணம்: சிந்து முதல் வைகை வரை' நூலை சுரபி கத்யால், ஜோதி லாவண்யா ஆகியோர் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். இந்த புத்தகம் ஏற்கெனவே ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.