ப.சிதம்பரம், பிரதமர் மோடி
ப.சிதம்பரம், பிரதமர் மோடி

கச்சத்தீவு விவகாரம்: மோடிக்கு சிதம்பரம் எதிர்க்கேள்வி!

கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. பேசுபொருளாக்கி உள்ள நிலையில், பா.ஜ.க. – காங்கிரஸ் இடையேயான விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

கச்சுத்தீவு பற்றி தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, பிரதமர் மோடி கருத்து கூறியதைத் தொடர்ந்து, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தனது எக்ஸ் தளத்தில் தன் பங்குக்கு கருத்திட்டிருந்தார். அதில், “கச்சத்தீவு விவகாரத்தில் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் பெறப்பட்ட தகவலை ஏற்கெனவே முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஏற்கனவே சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதுதான் கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது; எனவே, கச்சத்தீவு பற்றி கேள்வி எழுப்ப தி.மு.க.வுக்கு உரிமை இல்லை என்றும் ஜெயலலிதா கூறினார். கச்சத்தீவு பிரச்சினை குறித்து பொய் பிரசாரம் செய்வதை தி.மு.க. நிறுத்த வேண்டும்.” என நிர்மலா குறிப்பிட்டிருந்தார்.

பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துள்ள பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த கச்சத்தீவை இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அரசு, இலங்கைக்குத் தாரைவார்த்தது மன்னிக்க முடியாத துரோகம் ஆகும் என இன்று காலையில் அறிக்கை விட்டுள்ளார்.

இந்த விவகாரத்தில் பதிலளித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், “1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி அவர்கள் இப்பொழுது ஏன் கிளப்புகிறார்? கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி்.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.” என்று கூறியுள்ளார்.

மேலும், ”மோடி செய்தது என்ன? 2000 சதுர கி.மீ இந்திய பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. "எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை" என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பைத் மோடி நியாயப்படுத்தினார்.?

மோடியின் பேச்சை சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு.” என்றும் சிதம்பரம் கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com