கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் குடித்து உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி- 13 பேர் பலி; கலெக்டர் மாற்றம், எஸ்.பி. சஸ்பெண்ட்!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்ததால் இன்று 13 பேர் உயிரிழந்தனர்.

அந்த கிராமத்தைச் சேர்ந்த ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் நேற்று அதிகாலை முதலே கடும் வயிற்றுவலியால் அவதிப்பட்டனர். வரிசையாக ஒவ்வொருவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிலைமை மோசமாகவே புதுச்சேரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி மதியத்திற்குள்ளாகவே நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பா.ம.க. நிறுவனர் இராமதாஸ், பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என பல கட்சிகளின் தலைவர்களும் கள்ளச்சாராயத்தால்தான் மக்கள் பலியாகினர் என்றுகூறி கண்டனமும் தெரிவித்தனர்.

ஆனால் அரசுத் தரப்பில் மாவட்ட ஆட்சியர் சிரவன்குமார் ஜடாவத்தோ, நால்வரின் மரணத்துக்கு கள்ளச்சாராயம் காரணம் அல்ல என்று மறுப்பு தெரிவித்தார்.

பிற்பகலில் தொடங்கி மாலைவரை வரிசையாக பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து, இரவு 8 மணி நிலவரப்படி 13 பேர் உயிரிழந்துவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.

இதனிடையே மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணனும் கள்ளச் சாராயத்தால்தான் 4 பேர் பலியானதாகவும் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அறிக்கை வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து, அரசுத் தரப்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் மாவட்ட ஆட்சியரை மாற்றி அவருக்குப் பதிலாக எம்.எஸ். பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா இடைநீக்கம் செய்யப்பட்டு, அவருக்குப் பதிலாக ரஜத் சதுர்வேதி எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணி இருவரும் சென்னையிலிருந்து அங்கு விரைந்து நேரடியாக நிலைமையைப் பார்வையிட்டு வருகின்றனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com