முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கள்ளக்குறிச்சி: பலி எண்ணிக்கை 34-ஆக உயர்வு… ரூ.10 லட்சம் அறிவிப்பு!

Published on

கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ள நிலையில், உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தமிழக அரசு சார்பில் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45),சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர்.

இன்று 12 மணி நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்

இந்த பரபரப்பான சூழலில் சட்டப்பேரவை இன்று கூடிய நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50,000 ரூபாய் நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து, அறிக்கை சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com