கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யும் காட்சி
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் உடல் தகனம் செய்யும் காட்சி

கள்ளச்சாராயம்: ஓரணியில் அ.தி.மு.க., பா.ஜ.க., வி.சி.க. !

கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக அ.தி.மு.க.வின் ஆர்ப்பாட்டம், ஆளுநர் ரவியுடன் பா.ஜ.க. தலைவர்கள் சந்திப்பு, வி.சி.க. போராட்டத்துக்கு அனுமதி போன்ற விவகாரங்கள் இன்று அரசியல் களத்தைச் சூடாக்கியுள்ளன.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரம் குடித்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ள நிலையில், இன்னும் பலரின் நிலைமை கவலைக்கிடம் என்கிறார்கள்.

இச்சம்பவம் தொடர்பான வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகளான அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. வலியுறுத்தி வருகின்றன.

இதற்கு நேற்று பதிலளித்த தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி,“சி.பி.ஐ. விசாரிக்க வேண்டுமெனக் கோருவதெல்லாம் இந்த வழக்கைத் தாமதப்படுத்தி, வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மறைப்பதற்கு முயற்சி செய்வதாகும்.” என்றார்.

முன்னதாக, இந்த சம்வம் தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசும் விசாரித்து வருகிறது.

கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி
கள்ளக்குறிச்சி ஆர்ப்பாட்டத்தில் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. போராட்டம்

கள்ளச்சாராய மரணங்களைத் தடுக்கத் தவறியதாக தி.மு.க. அரசைக் கண்டித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதில் பேசிய அவர், ”கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களுக்கு முன்பும் அ.தி.மு.க. சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தேன். அதன்படி, நேற்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பும் மேடை அமைக்கப்பட்டது. இரவோடு இரவாக காவல்துறை அதை அகற்றியுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட மேடையில்தான் பேசிக்கொண்டிருக்கிறேன். ” என்றார்.

ஆளுநரிடம் மனு கொடுக்கும் அண்ணாமலை
ஆளுநரிடம் மனு கொடுக்கும் அண்ணாமலை

ஆளுநர் ஆர்.என். ரவி – அண்ணாமலை சந்திப்பு

கள்ளக்குறிச்சி விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும், அமைச்சர் முத்துசாமி மீது நடவடிக்கை எடுக்கவேண்டும், ஆர்ப்பாட்டம் நடத்த பா.ஜ.க.வுக்கு அனுமதி அளிப்பது போன்ற கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை ஆளுநர் ஆர். என். ரவியை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று முற்பகலில் நேரில் சந்தித்து வழங்கினார்.

தமிழிசை செளந்தரராஜன், திருப்பதி நாராயணன், அருள் உட்பட 9 பா.ஜ.க. நிர்வாகிகள் சென்றுள்ளனர்.

தொல்.திருமாவளவன்
தொல்.திருமாவளவன்

வி.சி.க. போராட்டத்துக்கு அனுமதி மறுப்பு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்திருந்த போராட்டத்திற்குச் சென்னை போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இருப்பினும் திட்டமிட்டபடி மாலை 4 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறும் என வி.சி.க. நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com