கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் இணைப்பா...? அரசு விளக்கம்!
கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையுடன் இணைக்கும் நடவடிக்கை ஏதும் இல்லை என்று தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை விளக்கம் அளித்துள்ளது.
பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவுமான வழிமுறைகள் வகுக்க ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமைக்கப்பட்டது. பத்து மாத ஆய்வுக்குப் பின்னர் அந்தக் குழு கடந்த ஜூன் மாதம் அரசிடம் அறிக்கையை சமர்ப்பித்தது.
அதில், “பள்ளிகளின் பெயர்களில் இருக்கும் கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலன் போன்ற பெயா்களை நீக்கி அரசுப் பள்ளிகள் என்று மட்டுமே குறிப்பிடவேண்டும்.”என்று கூறப்பட்டிருந்தது. இதனால், கள்ளர் மீட்பு, ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“சமூகநீதியை நிலைநாட்டுவதில் பெரும் அக்கறை கொண்டுள்ள திராவிட மாடல் அரசு நாட்டிற்கே முன்னோடியாக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்தவகையில், மக்கள் தொகையில் பெரும் பகுதியினரான பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் முன்னேற்றத்திற்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
குறிப்பாக, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்த மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்காகவும் சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, பிரமலைக் கள்ளர் வகுப்பைச் சேர்ந்தவர்கள் அதிகம் வாழும் தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் இயங்கிவரும் 299 கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளையும் வழங்கி வருகிறது. மேலும், திறன்மிகு வகுப்பறைகள், இலவச மருத்துவப் பரிசோதனைகள், ஆங்கில வழிக்கல்வி போன்ற பல்வேறு சிறப்புத் திட்டங்களையும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்த சூழ்நிலையில், இப்பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருவதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் முற்றிலும் தவறானதாகும். இப்பள்ளிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் தனித்துவத்தோடு இயங்கி வரும் சூழ்நிலையில், அவற்றை மேலும் மேம்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
எனவே, இப்பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையின் கீழ் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவந்துள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானதும் மற்றும் உள்நோக்கம் கொண்டது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.