
காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக பணியாற்றிய ப. உ செம்மல், எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்ட வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி உத்திரவிட்டார்.
இந்த உத்தரவுக்கு எதிராக போலீஸ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நீதிபதி ப. உ. செம்மலுக்கும் டிஎஸ்பி சங்கர் கணேசுக்கும் முன்விரோதம் இருந்ததால் இந்த கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், டிஎஸ்பி சங்கர் கணேஷை கைது செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட முதன்மை நீதிபதிக்கு எதிராக போலீசார் சுமத்திய குற்றச்சாட்டுகள் உறுதியாகின்றன. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க விசாரணை அறிக்கையைப் பணியிட மாற்ற குழுவுக்கு அனுப்ப வேண்டும் என உயர் நீதிமன்ற விஜிலென்ஸ் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இதைத்தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியாக இருந்த ப.உ.செம்மல், அரியலூர் லோக் அதாலத் தலைவராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்த சூழலில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை உயர் நீதிமன்ற பதிவாளரிடமிருந்து இதற்கான நோட்டீஸ் நீதிபதி செம்மலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதிகார துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது
முன்னதாக விஜிலென்ஸ் விசாரணைக்கு எதிராக நீதிபதி செம்மல் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி இந்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா, “நீதிபதி ஏன் இடைநீக்கம் செய்யப்படவில்லை என்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது்” என்று கூறியிருந்தனர்.
இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்ற ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணையை தொடர்ந்து நீதிபதி செம்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.