தூத்துக்குடி மாணவி வீட்டுக்கு சென்ற கனிமொழி... சூழ்ந்து கொண்டு வாக்குவாதம் செய்த ஊர்மக்கள்!

கனிமொழி எம்.பி.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
கனிமொழி எம்.பி.யுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
Published on

தூத்துக்குடியில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரை பார்க்கச் சென்ற கனிமொழி எம்.பியை முற்றுகையிட்டு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த மாவட்டத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி எம்.பி.கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் இருவரும் உயிரிழந்த மாணவியின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூற சென்றனர்.

ஆனால் அவர்களை முற்றுகையிட்ட மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்து 4 நாட்கள் ஆகிவிட்டது… இத்தனை நாட்களாக எங்கு சென்றீர்கள் என்று ஆவேசமாக மக்கள் கேள்வி எழுப்பினர். அவர்களிடம் கனிமொழி எம்.பி. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானமாக பதிலளித்தார்.

தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்று உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார். குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று நம்பிக்கை அளித்தார்.

அப்போது அங்கிருந்த ஊர் பெரியவர், மாணவி எப்போது காணாமல் போனார் என்பது முதல் காவல்நிலையத்தில் எப்படி அலட்சியமாக நடந்துகொண்டனர் என்பது வரை அனைத்தையும் கனிமொழியிடம் கூறினார்.

இதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “இளம் மாணவிக்கு ஒரு மிகப்பெரிய கொடுமை நடந்திருக்கிறது. 10 குழுக்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஏடிஎஸ்பி, 4 டிஎஸ்பி, 6 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள். அந்த சிறுமிக்கு நியாயம் கிடைக்க வேண்டும். கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும்” என்று கூறினார்.

மேலும் அவர், “பிரேதப் பரிசோதனை நடந்து இன்னும் முழுமையாக ரிப்போர்ட் வரவில்லை. விரைந்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com