25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இணைய மாநாடு!

25 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இணைய மாநாடு!

தமிழ்நாட்டு அரசின் சார்பில் 25ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ் இணையம் தொடர்பான மாநாடு வரும் 8ஆம்தேதி முதல் மூன்று நாள்கள் நடத்தப்படுகிறது. சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. 

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது 1999–இல் ‘தமிழிணையம்99’ மாநாடு நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து இப்போது தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் சார்பில், பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாடு நடத்தப்பட உள்ளது.

‘தமிழ்இணையம்99’ மாநாட்டின் விளைவாக உருவானதுதான் தமிழ் இணையக் கல்விக்கழகம். உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுத்தல், தமிழ் நூல்களையும் இதழ்களையும் அரிய ஆவணங்களையும் மின்னுருவாக்கம் செய்தல், கணினித் தமிழை மேம்படுத்துதல் ஆகியவற்றை இந்த நிறுவனம் மேற்கொண்டுவருகிறது.

‘தமிழ்இணையம்99’ மாநாட்டுக்குப் பிறகான காலகட்டத்தில் தொழில்நுட்பம் அடைந்திருக்கும் அபரிமிதமாக வளர்ச்சிபெற்றுள்ளது. புது யுகத்திற்கேற்ப தமிழ் மொழியும் புதுப் பொலிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது.

ஆங்கிலத் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுவரும் Natural Language Processing Tools (NLPT), செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இயந்திரவழிக் கற்றல் (Machine Learning), Machine Translation (MT), Sentimental Analysis (SA), Large Language Model (LLM), Automatic Speech Recognition (ASR) போன்றவற்றைத் தமிழில் உருவாக்கும் முயற்சியும் இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும். 

வெளி மாநிலங்களிலிருந்தும், அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, சுவிட்சர்லாந்து, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, ஆஸ்திரேலியா முதலிய  நாடுகளிலிருந்தும் மொழியியல் அறிஞர்களும்,

கூகுள், மைக்ரோசாஃப்ட், லிங்க்ட்இன், டெக் மகேந்திரா, AI சிங்கப்பூர், ஸோஹோ முதலிய புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களும் இம்மாநாட்டில் பங்குகொள்கிறார்கள்.

செயற்கை நுண்ணறிவு, இயந்திரவழிக் கற்றல், இயற்கை மொழிச் செயலாக்கம், மொழி மாதிரிகள், நவீன மொழித் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட தலைப்புகளில் 50க்கும் மேற்பட்ட வல்லுநர் உரைகளும் 40க்கும் மேற்பட்ட அமர்வுகள் - குழு விவாதங்களும் இம்மாநாட்டில் இடம்பெறுகின்றன.

தேர்ந்தெடுக்கப்பட்ட 35க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் மாநாட்டில் வாசிக்கப்பட உள்ளன.

மொழித் தொழில்நுட்பங்கள் தொடர்பான 30க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் அதிநவீனத் தயாரிப்புகள், திட்டங்கள், புதிய சிந்தனைகள் போன்றவற்றைப் பிரதிபலிக்கும் விதமாக 40 காட்சி அரங்குகள் மாநாட்டில் கலந்துகொள்வோர் பார்வைக்கு வைக்கப்பட உள்ளன.

மேலும், 7 பயிலரங்குகள் - பயிற்சிப் பட்டறைகளும் இம்மாநாட்டில் நடத்தப்படுகின்றன.

இம்மாநாடு தொடர்பான விவரங்கள் https://www.kanitamil.in என்ற இணையதளத்தில் உள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com