கணித்தமிழ் 24 மாநாடு
கணித்தமிழ் 24 மாநாடு

மாநாடு தாமதம் - வருத்தம் தெரிவித்த அமைச்சர் பி.டி.ஆர்.!

இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்க் கணிமை தொடர்பாக தமிழக அரசால் நடத்தப்படும் மூன்று நாள் மாநாடு சென்னையில் இன்று தொடங்கியது.

நந்தம்பாக்கம், வர்த்தக மையத்தில் இன்று மாலை 5.20 மணிக்கு மாநாடு தொடங்கியது. முதல் நிகழ்வாக, மாநாட்டுக் கண்காட்சியை தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தொடங்கிவைத்தார். துறையின் செயலாளர் தீரஜ்குமார், தமிழ் இணையக் கல்விக்கழக இயக்குநர் காந்தி, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் உட்பட பலரும் பங்கேற்றனர்.

ஏ.ஐ. சிங்கப்பூர் நிறுவனத்துடன் தமிழ் இணையக் கல்விக் கழகம் புரிந்துணர்வு ஒப்பந்தமும் இதில் செய்துகொள்ளப்பட்டது.

பின்னர் அமைச்சர் பேசுகையில், “ இன்று காலையில் எதிர்பாராத சூழலில் நான் டெல்லிக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து திரும்பிவரும் விமானம் 20 நிமிடம் தாமதமாக வந்தது. அதனால் இந்த நிகழ்வு சற்று தாமதமாகத் தொடங்கியது. அதற்கு என் வருத்தத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

”இது செயற்கை நுண்ணறிவின் யுகம். அலுவலக நடைமுறைகள் தொடங்கி தனி நபர் வாழ்க்கைமுறைவரைக்கும் இது பெரும் மாறுதலை ஏற்படுத்தும் என அறிஞர்கள் கணிக்கிறார்கள். கல்வித் துறையில் ஒரு பெரும் மாற்றம் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவத்தில், தொழில் துறையில் இது வரமாக அமையும் என கருதப்படுகிறது. அதேசமயம், சமூக, அரசியல், பொருளாதார அளவில் இந்தத் தொழில்நுட்பம் என்ன தாக்கத்தை, பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சமும் எழுந்துள்ளது.” என்றும் அமைச்சர் தியாகராஜன் பேசினார்.

முன்னதாக, ஆய்வாளர்கள், மாணவர்கள் என பல தரப்பினரும் எழுதிய ஆய்வுக்கட்டுரைகளின் தொகுப்பான கணிக்கோவையையும் அமைச்சர் வெளியிட்டார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com