காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த தண்ணீர் அளவை கர்நாடக அரசு தற்போது தமிழகத்திற்கு திறந்துவிடாத நிலையில், காவிரிப் பாசனத்திற்கு 45 நாள்கள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் எப்படி திறந்துவிட முடியும் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாட்டிற்கு காவிரியில் தினமும் வினாடிக்கு 9,000 கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிடும்படி, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருந்த நிலையில், அதைவிடக் குறைவான நீரையே கர்நாடகம் வழங்கியுள்ளது.
காவிரிப் பாசன மாவட்டங்களின் பாசனத் தேவையைக் கருத்தில்கொண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி முதல் 15 நாள்களுக்கு வினாடிக்கு 12,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது.
அதன்படி பல நாள்கள் தண்ணீர் திறக்கப்படாத நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் அடுத்த 15 நாள்களுக்கு வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்க மேலாண்மை ஆணையம் ஆணையிட்டது.
ஆனால், ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30 ஆம் தேதி வரையிலான 4 நாள்களில் அதற்கும் குறைவான அளவு தண்ணீர் தான் பிலிகுண்டுலு அளவை நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளது.
ஆகஸ்ட் 26ஆம் தேதி வினாடிக்கு 12,000 கனஅடி வரவேண்டிய நிலையில், 10,405 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி முதல் வினாடிக்கு 9,000 கனஅடி நீர் வர வேண்டிய நிலையில், 27ஆம் தேதி 7,454 கனஅடி, 28ஆம் தேதி 7.094 கனஅடி, 29ஆம் தேதி 6.702 கனஅடி, 30ஆம் தேதி 6,887 கனஅடி வீதம் மட்டுமே தண்ணீர் வந்துள்ளது.
இந்த நாள்களில் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளிலிருந்து வினாடிக்கு சுமார் 13,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டதாக கர்நாடக அரசு கூறிவருகிறது.
ஆனால், அதில் பாதியளவு மட்டும்தான் பிலிகுண்டுலு பகுதிக்கு தண்ணீர் வந்திருக்கிறது. கர்நாடக அணைகளிலிருந்து பிலிகுண்டுலு வரும்வரை பயணப் பாதையில் 1% முதல் 2% வரை நீர் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால் தினமும் 20% முதல் 25% வரை குறைவாகவே தண்ணீர் வந்திருப்பதை ஏற்க முடியாது. தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பதாக கணக்குக் காட்டிவிட்டு, அந்த நீரை வேறு பயன்பாட்டுக்கு கர்நாடகம் திருப்பிவிட்டு விட்டதோ என்ற ஐயம் எழுகிறது.
ஜூன் மாதம் முதல் இதுவரை தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரில், கர்நாடகம் 55 டிஎம்சி நீரை பாக்கி வைத்துள்ளது.
இன்றைய நிலையில், கர்நாடகத்தில் காவிரி, அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் 82 டிஎம்சி அளவுக்கு தண்ணீர் உள்ளது. 4 அணைகளுக்கும் சேர்த்து வினாடிக்கு 12,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
ஆனாலும், தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசுக்கு மனம் இல்லை.
காவிரிப் பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இப்போதுள்ள 52 டிஎம்சி நீரைக் கொண்டு 40 நாள்களுக்குகூட தண்ணீர் வழங்க முடியாது.
கர்நாடகத்திடமிருந்து உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரைப் பெறாவிட்டால், காவிரிப் பாசன மாவட்டங்களில் சம்பா, தாளடி பயிர்களைக் காப்பாற்ற முடியாது.
எனவே, உச்சநீதிமன்றத்தில் ஏற்கெனவே தொடரப்பட்டுள்ள வழக்கை உடனடியாக விசாரணைக்கு எடுக்கச் செய்து, கர்நாடகத்தின் துரோகத்தை எடுத்துரைக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தின் கண்காணிப்பில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்."என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.