கருமுத்து கண்ணன்
கருமுத்து கண்ணன்

விரைவில் சந்திப்பேன் என்றாரே... தொழிலதிபர் கருமுத்து கண்ணன் மறைவு;கலங்கிய மதுரை

ஆன்மீகம், கல்வி, தொழில், சமூகசேவை என அனைத்திலும் அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர் கருமுத்து கண்ணன். இவரது மறைவுக்கு கட்சி பேதமின்றி இரங்கல் குறிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. முதல்வர் ஸ்டாலின், வைகோ, கனிமொழி கருணாநிதி மற்றும் அதிமுகவினர் உள்ளிட்ட பல கட்சியினர் இரங்கல் தெரிவித்தனர்.

எழுபது வயதில் உடல்நலக்குறைவால் காலமான கருமுத்து கண்ணன், மதுரை கோச்சடையைச் சேர்ந்த கருமுத்து தியாகராஜர் செட்டியார் - ராதா தம்பதியினரின் மகன் ஆவார். சிறந்த கல்வியாளராக கருதப்படும் கருமுத்து கண்ணன், மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி தாளாளராகவும், தியாகராஜர் கலைக்கல்லூரி தலைவராகவும் இருந்துள்ளார். அதேபோல், கப்பலூரில் உள்ள தியாகராஜர் நூற்பாலை இயக்குநராகவும் இருந்தார். தொழிலாளர்களிடமும் பண்பாக பழகக் கூடியவராக இருந்துள்ளார்.

அவரின் சமூகப் பணிக்கான சான்று தான் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தக்கார் பதவி. கோயில் அறங்காவலர் குழுத்தலைவராக 2006ம் ஆண்டு முதல் தொடர்ந்து 17 ஆண்டுகளாக பதவி வகித்துள்ளார். அப்போதுதான் கோவில் வெகுவாக மேம்பட்டது. 2009ல் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை சிறப்புற நடத்தினார். இதனாலேயே தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோரின் அபிமானம் பெற்றவர். ஆட்சிகள் மாறியபோதும் தொடர்ந்து தக்கார் பதவியில் நீடித்தவர் கருமுத்து கண்ணன்.

கலைஞரின் நன்மதிப்பைப் பெற்றவராக இருந்த அவர், திமுக ஆட்சியில் மாநில திட்டக்குழு உறுப்பினராக இருந்துள்ளார். தற்போது இந்து சமய அறநிலையத்துறை உயர்நிலை ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராகவும் இருந்தார்.

அதேபோல், கொரோனா பாதிப்பு காலத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் ஆலைக்கு ஏற்பாடு செய்து உதவி செய்ததோடு, முதல்வர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி வழங்கியவர். இப்படி பல்வேறு சமூக நலப்பணிகள் செய்துள்ளார் கருமுத்து கண்ணன்.

மதுரை மீனாட்சி கோயிலின் தக்காராக இருந்த இவர், உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் சமீபத்தில் நடந்து முடிந்த மதுரை சித்திரைத் திருவிழாவில் கலந்து கொள்ளவில்லை. மதுரை கோச்சடையில் உள்ள அவரது இல்லத்திலேயே தங்கி மருத்துவம் பார்த்து வந்தார். இந்நிலையில், அவரது இல்லத்திலேயே நேற்று அதிகாலையில் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு மகன் ஹரி தியாகராஜன், 2 மகள்கள் உள்ளனர். அவரின் மறைவுக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

‘’எங்கள் இருவரது பணிச் சுமைகளும் அவரது உடல்நலக்குறைவும் சமீபத்திய காலங்களில் எங்கள் சந்திப்புகளைப் பெரிதும் குறைத்துவிட்டது. அண்மைக்காலம்வரை அவர் உடல்நலக்குறைவின் தீவிரத்தை நான் அறிந்திருக்கவில்லை. ஆனாலும், தெய்வீக அருளால், கடந்த வெள்ளிக்கிழமை, சபரிமலைக்கு சென்று மதுரை திரும்பியவுடன், அவருடன் இருக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது அவர் வாழ்வின் இறுதி வாரங்களில் அவரைச் சந்தித்த ஒரே நபர் நான்தான் என்றும், உடல்நலம் சரியில்லாமல் இருந்த போதிலும், எங்கள் இருவருக்குமிடையே இருக்கும் பல தலைமுறை பந்தம் காரணமாக அவரைச் சந்திப்பதற்கான எனது கோரிக்கையை அவர் ஏற்றுக்கொண்டார் என்றும் இன்று அறிந்தேன். அவர் மறைவுக்கு முன்னர், நான் அவருடன் இருந்த நேரத்தை, என் வாழ்வின் பெரும் பாக்கியங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். கடந்த வெள்ளியன்று அவரிடம் நான் சொன்ன கடைசி வார்த்தைகள், " உங்களை விரைவில் சந்திப்பேன்." எனது வார்த்தையைக் காப்பாற்றுவதற்கு முன்பே அவர் நம்மை விட்டுச் சென்றுவிட்டார் என்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது,’’என்று மாநில தொழில்நுட்பத்துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் ராஜன் உருக்கமாக டிவிட்டரில் கூறிஉள்ளார். அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்துகையில் தேம்பித் தேம்பி அழுதார் பிடிஆர் பழனிவேல்ராஜன்.

இதுபோல் பலரும் உருக்கமாக அஞ்சலி செலுத்தினர்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com