மக்களின் பிரச்னைகளை கையாளுவதில் கருணாநிதி, ஜெயலலிதா போன்று அல்லாமல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்வதாக புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
தனியார் நாளேடு ஒன்றுக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில், அருந்ததியர் இட ஒதுக்கீடு தொடர்பாக தமிழக முதல்வரையும் சந்தித்துப் பேசுவதில் உங்களுக்கு ஏதேனும் சிக்கல் இருக்கிறதா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு கிருஷ்ணசாமி, “முதல்வர் ஸ்டாலினை சந்திப்பதில் எனக்கு எவ்விதமான சிக்கலும் இல்லை. மாஞ்சோலை பிரச்சினை உச்சகட்டமாக இருந்தபோது 2024 ஜூன் மாதம் 8ஆம் தேதி அவர் கோவை வந்தார். அவரை பார்ப்பதற்கு அனுமதி கேட்டோம். அப்போதும் அனுமதி அளிக்கவில்லை. அதேபோல, நவம்பர் 7ஆம் தேதி சென்னையில் நாங்கள் நடத்திய பேரணிக்குப் பிறகு 8ஆம் தேதி தமிழக தலைமைச் செயலாளரைச் சந்திப்பதற்கு நேரம் கேட்டிருந்தோம். அவரும் நேரம் ஒதுக்கவில்லை. மக்களின் பிரச்சினைகளைக்கையாளுவதில் கருணாநிதியோ, ஜெயலலிதாவோ இதுபோன்று காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொண்டதில்லை.” என்று பதில் அளித்துள்ளார்.