தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் தவெக தலைவர் விஜய் கடந்த மாதம் (செப்டம்பர்) 27ஆம் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது.
இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்க வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக்குழுவை நியமித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிராக தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோல் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சிறுவன் பிருத்திக்கின் தந்தை பன்னீர்செல்வம், பாத்திமாபானுவின் கணவர் பிரபாகரன், சந்திராவின் கணவர் செல்வராஜ் ஆகியோரும் சம்பவம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தனர்.
இதேபோல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடக்கோரி பாஜக வழக்கறிஞர் ஜி.எஸ். மணியும் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த அனைத்து மனுக்களையும் நீதிபதிகள் மகேஸ்வரி, அஞ்சரியா அடங்கிய அமர்வு கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்தது. அப்போது தமிழக அரசு தரப்பிலும், விஜய் தரப்பிலும் காரசார வாதம் நடந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழங்கில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் விசாரணையை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் சிபிஐ நடத்தும் விசாரணையை மாதம்தோறும் இந்த குழுவிடம் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், மதுரை வரம்புக்குள் வரும் வழக்கை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வு எப்படி விசாரிக்க முடியும் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.