கரூரில் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் பலி! நடந்தது என்ன?
கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த அதிர்ச்சி தகவலை தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதிப்படுத்தி உள்ளார். அத்துடன் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க திருச்சியிலிருந்து சிறப்பு மருத்துவக் குழு அனுப்ப்படுவதாகவும் அவர் கூறி இருக்கிறார். பலியானவர்களில் 6 குழந்தைகள், 16 பெண்கள், 9 ஆண்கள் அடங்குவர்.
இன்று நாமக்கல்லில் பிரச்சார பயணத்தில் ஈடு பட்ட விஜய், அதை முடித்துக்கொண்டு கரூர் சென்றவர் இரவு 7:15 மணி அளவில் பேசத் தொடங்கினார். அவரது பேச்சைக் கேட்க கூட்டம் முண்டி அடித்ததில் நெரிசல் ஏற்பட்டு இந்த அசம்பாவித சம்பவம் ஏற்பட்டுள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
கரூரில் இருந்து வரும் செய்திகள் கவலை அளிப்பதாகவும் தேவையான உதவிகளைச் செய்ய அமைச்சர்களையும் மாவட்ட நிர்வாகத்தையும் அறிவுறுத்தி இருப்பதாக முதலமைச்சர் முக ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த அதிர்ச்சிகரமான உயிரிழப்பு சம்பவத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
ஏராளமான பொதுமக்கள் கூட்டம் கூடுகையில் நெரிசலில் சிக்கி இதுபோன்ற சாவுகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்து தரப்பினருமே பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்துவருகின்றனர். ஆனால் இதனிடையே பல்வேறு வதந்திகளும் சமூக ஊடகங்களில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதால் அனைத்து தாப்பினரும் பொறுப்புடன் இருக்கவேண்டிய கட்டாயம் உருவாகி உள்ளது.