நெல்லையில் ஆணவக்கொலை செய்யப்பட்ட பொறியாளர் கவினின் காதலி மருத்துவர் சுபாசினியின் தந்தை சரவணன் தலைமறைவாக இருந்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டார். அவருடைய தாய் இன்னும் கைதுசெய்யப்படாத நிலையில், கொல்லப்பட்டவரின் காதலி சுபாசினி குறித்து சமூக ஊடகங்களில் மாறுபட்ட தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இன்று அவர் பேசிய காணொலி ஒன்று வெளியானது. அதில், தானும் கவினும் உண்மையாகக் காதலித்ததாகவும் திருமணத்துக்கு கவின் ஆறு மாதம் அவகாசம் கேட்டதாகவும் அதுகுறித்துப் பேச ஜூலை 28ஆம் தேதி தான் அவரை அழைத்திருந்த நிலையில் 27ஆம் தேதியன்று கவின் தன் தாத்தாவின் சிகிச்சைக்காக வந்துவிட்டார் என்றும் அப்போது சிகிச்சை தொடர்பாக தான் அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கவினைக் காணவில்லை என்றும் இப்படி நடந்துவிட்டது என்றும் மருத்துவர் சுபாசினி கூறியுள்ளார்.
மேலும், தன்னுடைய பெற்றோருக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், கவினின் படுகொலை குறித்து அவர் எதையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.