கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்

வியாபாரிகள் ரூ.2 இலட்சம்வரை எடுத்துச்செல்ல விடவேண்டும்- சி.பி.எம்.

வணிகர்கள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கப் பணம் எடுத்துச் செல்ல தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. 

இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”               தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் மக்கள் வெளியே செல்லும் போது ஆவணங்களின்றி ரூ. 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் எடுத்துச் செல்லக் கூடாது என்று தேர்தல் ஆணையம் வரம்பு நிர்ணயித்துள்ளது. இந்த நடைமுறையால் வணிகர்கள், சிறு-குறு தொழில் முனைவோர்கள், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பகுதியினருடைய சிறு மூலதனங்கள் முடக்கப்படுவதால் அவர்களில் தொழில், வர்த்தகம் முடக்கப்பட்டு பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது. இதன் காரணமாக இவர்கள் தேர்தல் நடத்தை விதிகள் முடியும் வரை வாழ்வாதாரம் இழக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.  தமிழகத்தில் இவ்வாறாக ஆயிரக்கணக்கான வணிகர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.” என்று குறிப்பிட்டுள்ளார். 

”குறிப்பாக, வணிகர்கள், காய்கறி வியாபாரிகள், சிறு கடை நடத்துவோர், கால்நடை வியாபாரிகள், சிறு-குறு தொழில் முனைவோர் உள்ளிட்ட பகுதி மக்கள் அன்றாட பண பரிமாற்றம் மூலம் தொழில் நடத்துபவர்கள். தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பினால் இவர்கள் பணத்தை கொண்டு செல்லும் போது எந்தவித ஆவணங்களையும் கொண்டு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். இவர்களுடைய பணம் உரிய ஆவணங்கள் இல்லை எனக் கூறி பறிமுதல் செய்யப்பட்டால் அதை திரும்ப பெறுவதற்கு பல முறை அலைகழிக்கப்படும் நிலையும் உள்ளது என தகவல்கள் வெளி வருகின்றன.

இது சம்பந்தமாக தலைமை தேர்தல் அதிகாரியை நேரில் சந்தித்து வணிகர்கள் ரூ. 2 லட்சம் வரை ரொக்கப் பணம் எடுத்துச் செல்வதற்கு அனுமதியளிக்க வலியுறுத்தியுள்ளனர். தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை  எடுக்க வேண்டுமெனக் கோரி ஏப்ரல் 9 அன்று தமிழகம் முழுவதும் போராட்டத்திற்கும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

எனவே, தலைமை தேர்தல் ஆணையர் விரைந்து தலையிட்டு வணிகர்கள் குறைந்தபட்சம் ரூ. 2 லட்சம் வரை எடுத்துச் செல்லும் வகையில் அவர்களின் கோரிக்கையை விரைந்து நிறைவேற்ற வேண்டும்.”என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துவதாக பாலகிருஷ்ணன் தன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com