கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்
கே.பாலகிருஷ்ணன், சி.பி.எம். மாநிலச் செயலாளர்

தேர்தல் பணியாளர்களுக்கு பழைய முறையையே தொடருங்கள்- கே. பாலகிருஷ்ணன் கடிதம்!

தேர்தல் பணிகளுக்குச் செல்லும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் தபால் வாக்குகள் செலுத்துவதற்கு ஏதுவாக பழைய நடைமுறையையே பின்பற்றிட வேண்டுமென வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தமிழ்நாட்டுத் தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்தக் கடித விவரம்:

2024 மக்களவை பொதுத்தேர்தலையொட்டி முதல் கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ந் தேதியன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது. இத்தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் தபால் வாக்குகள் அளிப்பதற்கு கடந்த தேர்தல்களைப் போல அல்லாமல், இந்த தேர்தலில் முதல் முறையாக ஏப்ரல் 16ந் தேதி மாலை 5.00 மணி வரை மட்டுமே தபால் வாக்குகளை அந்தந்த பயிற்சி மையங்களில் மட்டுமே பெறவும், செலுத்தவும் முடியும் என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கு பிறகு தபால் வாக்குகளைப் பெறவும், செலுத்தவும் வாய்ப்பு இல்லை எனத் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு தபால் வாக்குகளை வழங்குவதில் குளறுபடிகள் நடந்ததாகவும், படிவம் கிடைக்கவில்லை என்றும் ஆங்காங்கே புகார்கள் உள்ளன. இதனால் தேர்தல் பணிகளில் ஈடுபடும் பெரும்பாலான அலுவலர்கள் தங்கள் வாக்குகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.  தேர்தல் ஆணையத்தின் இந்நடவடிக்கையால் தேர்தல் பணிக்குச் செல்லும் அலுவலர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, தேர்தல் பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவரும் ஏற்கனவே கடந்த தேர்தல்களைப் போல வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான ஜூன் 4, 2024க்கு முன்னர் தங்களது வாக்குகளை செலுத்தும் நடைமுறையை பின்பற்றி அவர்கள் அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிப்பதை உறுதி செய்வதற்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

மேலும், தேர்தல் பணிகளுக்குச் செல்லும்  அலுவலர்கள் தபால் வாக்குகள் பெறவும், செலுத்தவும் உள்ள பயிற்சி மையங்களை (Facilitation Centre) ஏப்ரல் 16ந் தேதி என்பதற்கு பதிலாக ஏப்ரல் 18ந் தேதி வரை கால நீட்டிப்பு செய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறோம்.” என்று அக்கடிதத்தில் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com