
”திருப்பரங்குன்றம் சர்வே கல்லில் ஒரு முறை தீபம் ஏற்றுங்கள் என்ற உச்சநீதிமன்றத்தின் இடைக்கால ஆணை மக்கள் விரோத, அரசியலமைப்பின் மதச்சார்பின்மைக்கு விரோதமான ஆணையே! அமைதிப் பூங்காவாகத் தமிழ்நாட்டைக் காக்க,
தமிழ்நாடு அரசு இறுதிவரை உறுதியாக நிற்க வேண்டும்! மதக் கலவரம் செய்ய முனையும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்! இதில் எந்தவித சமரசமும் கூடாது.” என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கை :
“ திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம் இடைக்கால ஆணை ஒன்றை வழங்கியுள்ளது. அது முற்றிலும் மக்கள் விரோத ஆணையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு விரோதமான ஆணையாகும்.
அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். சார்பு
நாடறிந்த ஒன்றாகும்!
திருப்பரங்குன்றத்தில் மலை மேல் உள்ள தர்காவின் அருகில் உள்ள சர்வே கல்லில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. இந்துத்துவாவினர் திடீரென கோரிக்கை ஒன்றை எழுப்பினர். அதற்காகப் போராட்டம் நடத்தினர். சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தனர். அதில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், அப் பிரச்சினை தொடர்பான முந்தைய வழக்குகளின் தீர்ப்பினையும், தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை ஆகியவற்றின் கருத்தினையும், வாதத்தினையும் புறந்தள்ளி, தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இவரின் அப்பட்டமான ஆர்.எஸ்.எஸ். சார்பு நாடறிந்த ஒன்றாகும்.
அந்த வழக்கின் விசாரணையே அதிர்ச்சிக்குரிய சட்ட விசாரணை முறையாகும். நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், எதிர் மனுதாரர்களுக்குக் கருத்தைத் தெரிவிக்க வாய்ப்புத் தராமலேயே விசாரணையை முடித்துத் தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்ற அமர்வில் தொடுக்கப்பட்ட வழக்கிலும், மதுரைக் கிளையின் தீர்ப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றத்திற்குத் தமிழ்நாடு அரசு, இந்து சமய அறநிலையத் துறை, மாவட்ட ஆட்சியர், தர்கா தரப்பு, அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் ஆகியோரால் கொண்டு செல்லப்பட்டது இந்த வழக்கு.
இடைக்கால ஆணை வழங்கப்பட்டுள்ளது!
இந் நிலையில் வரும் 24 ஆம் தேதி கார்த்திகை தீபம் என்பதால், தமிழ்நாடு அரசு சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை கோரி அவசரமாக உச்சநீதிமன்றத்தை நாடியது. அந்த வழக்கில் தான் நேற்று (20.11.2026) இடைக்கால ஆணை வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு கோரிய இடைக்காலத் தடையை வழங்காமல், முழுமையாகவும் வழங்க மறுக்காமல், இந்த ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது – உச்சநீதிமன்ற நீதிபதி அரவிந்தகுமார் தலைமையிலான அமர்வு.
இப்படி அவசரமாக ஓர் உத்தரவை
வழங்க வேண்டிய அவசியம் என்ன?
வழக்கே அதற்குத் தானே! பிறகு, ‘ஒரு நாள் ஏற்றலாம்’ என்று ஆணையிடுவதை எவ்வகையில் ஏற்க முடியும்? வழக்கின் முழுத் தீர்ப்பை அளித்துவிட்டதற்குச் சமம் தானே அது!
ஒரு முறை இந்த நடைமுறை பின்பற்றப்பட்டால், பிறகு அது தொடரவேண்டும் என்ற கோரிக்கை எழும் ஆபத்து உண்டு என்பதையும் சுட்டிக்காட்டியுள்ள அதே உச்சநீதிமன்றம், இப்படி அவசரமாக ஓர் உத்தரவை வழங்க வேண்டிய அவசியம் என்ன?
தமிழ்நாடு அரசின் கோரிக்கை என்பது ஏதோ ஒரு கட்சியின் முடிவு அல்ல; திமுக ஆட்சியில் இருக்கும்போதும் சரி, இப்போது தவெக ஆட்சியில் இருக்கும்போதும் சரி, தமிழ்நாடு அரசு என்பதன் நிலைப்பாடு ஒன்றாகவே இருப்பதன் காரணம் என்ன? தமிழ்நாட்டில் இதையொட்டி அமைதியைப் பாதிக்கும் சூழல் எழலாம்; மதக் கலவரத்தைத் தூண்டத் தொடர்ந்து முயற்சித்துவரும் இந்துத்துவ சக்திகளுக்கு இப்படியொரு வாய்ப்பை வழங்கிவிடக் கூடாது என்ற எச்சரிக்கைக் காரணமாகத் தானே மக்களின் அமைதி வாழ்வுக்குப் பொறுப்பான அரசாக இந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது தமிழ்நாடு அரசு.
உச்சநீதிமன்றம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
தர்கா அருகில் உள்ள சர்வே கல்லில் தீபம் ஏற்றுவதனால், அமைதிக்குக் குந்தகம் ஏற்படலாம் என்பதை உணர்ந்துதானே, நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அளித்த தீர்ப்பிலேயே சி.அய்.எஸ்.எஃப். படைகளை அனுப்புகிறேன் என்றார். இப்போதும் கூட சி.ஆர்.பி.எஃப். படையைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றுதானே உச்சநீதிமன்றம் சொல்கிறது. தெரிந்தே இப்படி ஓர் ஆபத்தான சூழலை உச்சநீதிமன்றம் உருவாக்கலாமா? காவல்துறையும், மாவட்ட ஆட்சியரும் ஏன் தடுத்தார்கள் என்பதை உச்சநீதிமன்றம் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
புதிதாக இந்துத்துவவாதிகளால் சர்ச்சைக்குள்ளாக்கப்பட்டுள்ள தூண், சர்வே கல் தான் என்பதைத் தமிழ்நாடு அரசும் இந்த முறை வாதமாக வைத்துள்ளது. அதற்கான சான்றுகளைக் கொடுத்துள்ளது பாராட்டத்தக்கதாகும். அது குறித்து நீதிமன்றம் எந்த முடிவும் எடுக்காத போது, அது சர்வே கல்லா, தீபத்தூணா என்று நீதிமன்றம் விசாரித்து உறுதிசெய்யாத போது, அதில் ஒரு முறை மட்டும் தீபம் ஏற்றிக் கொள்ளுங்கள் என்று தீர்ப்பளிப்பது எந்த விதத்தில் ஏற்கத்தக்கது?
அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 ஆம் கூறுகள்!
இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் மத உரிமை என்பது எந்தக் கட்டுப்பாட்டுக்கும் உட்படாதது அல்லவே! அரசியலமைப்புச் சட்டத்தின் 25, 26 ஆம் கூறுகள் பொது ஒழுங்குக்கும், ஒழுக்க நெறிக்கும், நல்வாழ்வுக்கும் முரணானதாக அமைய முடியாது என்பதைத் தெளிவாக வரையறுக்கிறதே!
25. Freedom of conscience and free profession, practice and propagation of religion (1) Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.
மக்கள் நலமும், சட்டம் – ஒழுங்குப் பாதுகாப்பும் தானே முதன்மையான பிரச்சினை?
பொது அமைதிக்கும், சட்ட ஒழுங்குக்கும் பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் தானே தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பைச் செயல்படுத்த மறுத்தன. மேல்முறையீட்டுக்குச் சென்றன. இப்போது உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இதில் அரசியல் நோக்கமோ, சார்புத் தன்மையோ இல்லையே! மக்கள் நலமும், சட்டம் – ஒழுங்குப் பாதுகாப்பும் தானே முதன்மையான பிரச்சினை?
இதுவரை இல்லாத ஒரு வழக்கத்தைப் புதிதாக உருவாக்கும் வகையில்...
மேலும், அந்த மலை குறித்து ஏற்கெனவே 1923 ஆம் ஆண்டிலேயே தீர்ப்பு அளிக்கப்பட்டு, அது லண்டன் பிரிவி கவுன்சிலிலும் ஏற்கப்பட்டுள்ளது. வழக்கமான தீபம் ஏற்றுவதற்கான இடத்தை மாற்றி, வேறு இடத்தில் ஏற்ற வேண்டும் என்று இதுவரை தொடுக்கப்பட்ட வழக்குகளில் எல்லாம் இந்து சமய அறநிலையத் துறையின் நிலைப்பாடே சரி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மாறி மாறி புதுப் புது இடங்களை ஒவ்வொருவராகக் கேட்டுக் கொண்டு இருப்பார்கள்.
அங்கெல்லாம் ஏற்றும் வழக்கமில்லை என்று ஆகம கர்த்தாக்கள் கூறுகிறார்கள். கோயில் நிர்வாகம் கூறுகிறது. அதை முழுமையாக விசாரிக்காமல், இதுவரை இல்லாத ஒரு வழக்கத்தைப் புதிதாக உருவாக்கும் வகையில் உச்சநீதிமன்றம் ஓர் ஆணையைப் பிறப்பிக்கலாமா? இந்த சர்வே கல் நாட்டின் பல பகுதிகளிலும் உள்ளனவே – அங்கெல்லாம் தீபம் ஏற்றச் சொல்வார்களா?
இந்தப் பிரச்சினையை உருவாக்கியவர்களுக்கு, மத மோதல்களை உருவாக்குவதுதானே நோக்கம்? இது பக்திக்காக உருவான பிரச்சினை இல்லையே! மலையின் இன்னொரு புறத்தில் உள்ள தர்கா இந்துத்துவவாதிகளின் கண்களை உறுத்துகிறது. அந்த தர்காவின் பழக்க வழக்கங்கள் தொடர்பான பிரச்சினை ஒன்று எழுப்பப்பட்டு, அது ஒரு தனி வழக்கு நடைபெற்றுவருகிறது.
இதற்கிடையில்தான், இடைக்காலத் தடை கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் இப்படி ஒரு தீர்ப்பை வழங்கியதன் மூலம், கிராமங்களில் சொல்லும் பழமொழியைப் போல “அசல் அநியாயம் அப்பீலில் அதுவே காயம்’ (நிரந்தரம்) என்ற நிலையை உருவாக்கலாமா?
இது ஒரு மக்கள் விரோத தீர்ப்பே!
முழு விசாரணையை முடிக்காமல், பிரச்சினை ஏற்படுத்தப்பட்டுள்ள ஓர் இடத்தில் ‘‘தீபம் ஏற்றுங்கள் - ஒரு முறை மட்டும் ஏற்றுங்கள்’’ என்று கூறியிருப்பது, முழுக்க முழுக்க இது ஒரு மக்கள் விரோத வித்தியாசமான தீர்ப்பே!
குறிப்பிட்ட ஓர் ஆண்டில், குறிப்பிட்ட இடத்தில் தீபம் ஏற்றலாம்; அடுத்த ஆண்டில் ஏற்றக் கூடாது என்று கூறுவது சட்டத்தில் இடம்பெற்றுள்ளதா?
என்னே வினோதம்?
இந்தியாவைப் பொறுத்தவரை அரசியலமைப்புச் சட்டத்தை நிலைநாட்ட உச்சநீதிமன்றம் தான் கடைசி நம்பிக்கை என்ற நிலையில், இந்தத் தீர்ப்பு வந்திருப்பது கெடுவாய்ப்பாகும்.
இந்த இடைக்கால உத்தரவினால், வீண் குழப்பம். இதுவரை திருப்பரங்குன்றம் மக்கள் மத வேறுபாடு இல்லாமல் இருக்கும் சுமூகமான, சமூக ஒருங்கிணைப்பு பாதிக்கப்படும்.
அதைத்தானே ஹிந்து மதம் சார்ந்த கலவரவாதிகள் விரும்புகிறார்கள்? இந்த ஆணை அதற்குத் துணை போகலாமா? ‘வேலியே பயிரை மேயத் தூண்டும்’ கொடுமையான நிலை அல்லவா?
ஒரு முறை என்றாலும், ஒரு நிமிடம் என்றாலும் உரிமைப் பறிப்பும், சட்டம் ஒழுங்குச் சீர்கேடும், மதக் கலவரத்துக்கான விதை ஊன்றலும் நடந்துவிடக் கூடாது.
தமிழ்நாடு அரசு இதில் இறுதிவரை
உறுதியாக நிற்க வேண்டும்
கட்சி, மத வேறுபாடுகள் அற்று, தமிழ்நாட்டு மக்கள் இப் பிரச்சினையில் ஒன்றுபட்டு உறுதியாக உடன் நிற்க வேண்டும்.
அமைதிப் பூங்காவான தமிழ்நாட்டைக் காக்க, தமிழ்நாடு அரசு இதில் இறுதிவரை உறுதியாக நிற்க வேண்டும். மதக் கலவரங்கள் செய்ய முனையும் சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். இதில் எந்தவிதமான சமரசமும் கூடாது... கூடாது!” என்று கி.வீரமணி கூறியுள்ளார்.