எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி நடிகை திரிஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்பு வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து தன் சமூக ஊடகப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது :
"உதயநிதி ஸ்டாலின் பேசியதைக் கேட்டேன். மிகவும் தரக்குறைவான, மலிவான பேச்சாக அது இருந்தது. அவர் விரும்பும் அரசியல் கலாசாரத்தைப் பிரதிபலிப்பதைப் போன்று அவரது பேச்சு உள்ளது.
இதுபோன்ற மனநிலை கொண்டவர் அரசியல் கட்சியை வழிநடத்தவும், ஒரு நாள் மாநிலத்தை ஆளவும் விரும்பினால், கடவுள்தான் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.
பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, இழிவுபடுத்துவதை ஒரு அரசியல் நாடகமாக நடத்தி, தங்கள் ஆதரவாளர்களின் கைதட்டல், விசில்களைப் பெறுவதில் மகிழ்பவர்களிடமிருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
இதுபோன்ற பேச்சுகளைச் சாதாரணமாகக் கருதுபவர்கள் ஒன்றை நினைவில்கொள்ள வேண்டும். பெண்களின் கண்ணியம் அரசியலுக்கு பலிகடாவாக ஆக்கப்பட்டால், எந்தவொரு குடும்பமும் (உங்கள் குடும்பம் உட்பட) அதன் விளைவுகளிலிருந்து தப்ப முடியாது. அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பொதுவில் பேசுவதற்கு எல்லை இருக்கவேண்டும்.
பெண்கள் மதிக்கப்பட வேண்டுமே தவிர, உங்களின் கேளிக்கைகளுக்கும் விருப்பங்களுக்கும் பகடைக் காய்களாகப் பயன்படுத்தப்படக்கூடாது.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி திரிஷாவை அவமதித்ததற்காக பொது மேடையில் அவரிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்.
தனது இழிவான பேச்சை அவர் ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்பதற்கான துணிச்சலும் கண்ணியமும் அவரிடம் உள்ளதா என்பதைப் பார்க்கலாம்." என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.