இப்போது கோவை சிறைக் கைதி தப்பியோட்டம்... 4 போலீஸ் சஸ்பெண்ட்!

Kovai prisoner Ragavan escaped
தப்பியோடிய கோவை சிறைக் கைதி ராகவன்
Published on: 

கோவை மத்திய சிறையிலிருந்து கைதி ராகவன் நேற்று தப்பியோடினார்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், அன்னூர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட வழிபறிக் கொள்ளை தொடர்பான வழக்கில் நேற்று நீதிமன்றத்தில் ராகவன் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.

பின்னர், கோவை மத்திய சிறைக்கு அழைத்துவரப்பட்ட அவர், சிறையில் அடைப்பதற்கு முன்னர் நடத்தப்படும் சோதனைக்காகக் காக்கவைக்கப்பட்டு இருந்தார். அப்போது, ராகவன் கோவை மத்திய சிறையிலிருந்து தப்பியோடினார்.

அதைத் தொடர்ந்து, கோவை மத்திய சிறை வளாகம் முழுவதும் காவலர்கள் ராகவனைத் தேடிப் பார்த்தனர். எங்குத் தேடியும் கைதி ராகவன் கிடைக்காததால், கோவை ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் கைதி காணாமல்போன விவகாரம் குறித்து புகார் அளிக்கப்பட்டது.

கோவை மத்திய சிறைக் கைதி தப்பிய ஓடியதால், 4 சிறைக் காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக, புழல் சிறையிலிருந்து இரண்டு கைதிகளும், தேனி மாவட்டச் சிறையிலிருந்து 17 கைதிகளும் தப்பியோடியதை அடுத்து, கோவை மத்திய சிறையில் இருந்தும் ஒரு கைதி தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம் இந்த சம்பவம் தொடர்பாக கேட்டபோது, கைதிகள் தப்பிய விவகாரத்தில் குழு அமைத்து நடவடிக்கை எடுக்க முடிவுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram