செய்தியாளர் சந்திப்பில் கே.பி. முனுசாமி
செய்தியாளர் சந்திப்பில் கே.பி. முனுசாமி

அ.தி.மு.க.- கருப்பண்ணன் பேச்சுக்கு முனுசாமி விளக்கம்!

அடுத்த தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் விவகாரம்தான் பிரச்னை என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் கூறியிருந்தார். அது சமூக ஊடகத் தகவல்களால் வந்த தவறான பேச்சு என்று அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கம் அளிப்பதற்காக அவர் கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது, “ பா.ஜ.க. கூட்டணி தொடர்பாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறோம். அதற்கான காரணம் எல்லாருக்கும் தெரியும். சில நேரங்களில் வலைதளங்களில் தவறான கருத்துகள் சொல்லி சொல்லி வருகிறபோது அந்தத் தவறான கருத்துகள் மனதில் பதிகிறபோது உண்மைநிலை மறந்து சொல்வது இயற்கை. அப்படித்தான் கருப்பண்ணன் சொல்லியிருக்கலாம்.” என்றார் அவர்.

”அதிமுக என்ற இயக்கத்தை உருவாக்கி, 11 ஆண்டுகள் எம்ஜிஆரும், ஜெயலலிதா 16 ஆண்டுகளும் அவரின் மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி நான்கரை ஆண்டுகளும் ஆட்சிசெய்த பின்னர், 2026ஆம் ஆண்டில் நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதுதானே எங்கள் இலக்காக இருக்கமுடியும்? ” என்று அவர் கேட்டார்.

”இதில் பா.ஜ.க. எங்கிருந்து வருகிறது? இவர்களாக கற்பனை செய்துகொண்டிருக்கிறார்கள். எங்கோ இருப்பவர்களை நாங்கள் வருகிறோம் என்று சொல்கிறார்கள். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு மக்களிடம் எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்பது தெரியும்.” என்றும் முனுசாமி கறாராகக் கூறினார்.

அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டை என எச்.ராஜா பேசியதற்குப் பதிலளித்த முனுசாமி, “ எங்களோடு பயணித்தவர்தானே நீங்கள்? நாங்கள் விரல்நீட்டியதால் எம்.எல்.ஏ.ஆனவர்தானே நீங்கள்...எப்படி இப்படியெல்லாம் பேசலாம்?” என்றவர், ராஜா மிகவும் கீழ்த்தரமாகப் பேசுவதாகக் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com