விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த செய்தியாளரின் உடல் உறுப்புகளை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு தானம் செய்து அவரின் குடும்பத்தினர் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் தினகரன் நாளிதழின் செய்தியாளர் அன்பரசன் (56) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.26) அன்று சாலை விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும், சிகிச்சை பலனின்றி அவர் மூளைச் சாவடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அவருக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையில், திரு.அன்பரசனின் உடல் உறுப்புகளை தானம் செய்தால், சிகிச்சை கட்டணம் செலுத்த வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
அதை நிராகரித்துள்ள அன்பரசனின் குடும்பத்தினர், உடல் உறுப்புகளை ஏழை மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அன்பரசனின் உடல் உறுப்புகளை தானமாக வழங்கியுள்ளனர்.
இப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையிலும் மனதை திடப்படுத்திக் கொண்டுஅன்பரசன் உடல் உறுப்புகளை ஏழை மக்களுக்கு தானமாக வழங்க முடிவெடுத்த அவருடைய குடும்பத்தினருக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் நன்றி தெரிவித்துள்ளன.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 20 ஆண்டுகளுக்கு மேலாக பத்திரிகை நிருபராக பணியாற்றிய அன்பரசனின் குடும்பத்தினருக்கு ஏற்பட்டுள்ள இந்த இக்கட்டான சூழ்நிலையில் தமிழக அரசு உடனடியாக உரிய நிவாரணம் வழங்கி உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை பத்திரிகையாளர் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.