கூடங்குளம் அணுமின் நிலையம்... 19,000 ரகசிய தரவுகள் கசிவு!

Kudankulam nuclear power plant
கூடங்குளம் அணுமின் நிலையம்
Published on

கூடங்குளம் அணுமின் நிலையத்தின் உட்கட்டமைப்பு, சப்ளையர்கள் தொடர்பான ரகசிய ஆவணங்கள் 'டார்க் வெப்' இணையதளத்தில் கசிந்தது தெரியவந்துள்ளது.

பிரபல ஹேக்கிங் திருட்டுக் கும்பலான 'வேர்ல்ட் லீக்ஸ்' இந்த தரவுகளைத் திருடியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய அணுமின் நிலையமான கூடங்குளம் அணுமின் நிலையம், திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ளது.

இந்திய அணுசக்தி கழகம், ரஷ்யா இணைந்து தற்போது 6,000 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் அணுமின் நிலயத்திற்கு தேவையான கட்டமைப்பு வசதிகளைச் செய்துவருகின்றன.

ஏற்கெனவே 1000 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் யூனிட் 1,2 செயல்பட்டு வருகின்றன. யூனிட் 3,4,5,6 ஆகியவற்றில் பல்வேறு நிலையிலான கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர், அணுமின் நிலையத்தின் யூனிட் 3,4-க்கான கட்டமைப்பை வடிவமைப்பதற்கான ஒப்பந்தத்தைப் பெற்று, அதன் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், 'வேர்ல்ட் லீக்ஸ்' என்ற இணையதளத்தில், கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பான 19,000 ரகசியக் கோப்புகளை ஹேக்கர்கள் குழு வெளியிட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

மூன்றாம் தர இந்திய தரவு மையத்தின் சேவை நிறுவனமான யோட்டாவின் சர்வரிலிருந்து தரவுகள் கசிந்திருப்பதாக ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்தது.

ரிலையன்ஸ் சர்வரில் சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் நடைபெறுவதைக் கண்டறிந்து, உடனடியாக அதைத் தடுத்து நிறுத்தியதாக யோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

அணுமின் நிலையத்தின் காற்று வெளியேற்றம், குளிரூட்டும் அமைப்புகள், கட்டுப்பாட்டு அறைக்கான லேஅவுட்கள், கருவிகள் பரிசோதனை விவரம், ஆய்வுகள் பற்றிய தகவல்கள் ஆகியவை தற்போது கசிந்துள்ளன.

இருப்பினும், மிகவும் ரகசியமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்றும், இந்தக் கசிவானால் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாது என்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசின் மின்னணுவியல் - தகவல் தொழிழ்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் முதன்மை இணையப் பாதுகாப்புக் குழுவினர் இந்த ஹேக்கிங் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com