’ஏஏங்க்க.. கூமாபட்டிக்கு வாங்க’ ஊருக்கே விபூதி அடித்த இளைஞர்!

தங்க பாண்டியின் இன்ஸ்டா பக்கம்
தங்க பாண்டியின் இன்ஸ்டா பக்கம்
Published on

’’ஏஏஏங்க.. கூமாபட்டிக்கு வாங்க… தமிழ்நாட்டிலேயே எங்க ஊரு மாதிரி எங்கயும் கிடையாது. ஏன் ஒலகத்துலயே கிடையாது. ஏங்க தனி ஐலண்டுங்க… அங்க பாருங்க காஷ்மீர் மாதிரி இருக்கா.. இங்கே பாருங்க கர்நாடகா மாதிரி இருக்கா.. இங்க பாருங்க செர்மனி மாதிரி இருக்கா.. அதாங்க கூமாபட்டி..’’ மாய்ந்து மாய்ந்து தண்ணீருக்குள் நின்றபடியே சொல்லி பக்கத்து ஊர்க்காரர்களுக்கே தெரியாத கூமாபட்டியை உலக பேமஸ் ஆக்கிவிட்டிருக்கிறார் தங்கபாண்டி.

விளைவு இன்ஸ்டா இளைஞர்கள் பைக், கார்களில் கூமாபட்டிக்குப் படையெடுக்க மாவட்ட நிர்வாகம் அதிர்ந்துபோயிருக்கிறது. ‘அர்ரே பாய்.. இந்த பக்கம் வந்துடாதீங்க.. அங்கே ஒண்ணும் இல்ல..” என்ற ரேஞ்சுக்கு பொதுப்பணித்துறை அறிவிப்பு விட்டிருக்கிறது. அங்கே நான்கு ஆண்டுகளாக மூடிக்கிடந்த பெரியாறு பிளவுக்கல் அணையில் நீரில்தான் தங்கப்பாண்டி இறங்கிக்குளித்து வீடியொக்களை விசிறிவிட்டிருக்கிறார். வனவிலங்குகள் நடமாட்டம் என்பதால் அதை மூடி இருந்த அரசுத் துறையினர் இப்போது மேலும் தடைகளை இறுக்கிவிட்டனர்.

‘ஏங்ங்க்க்க்கா. இந்த தண்ணியப்பாத்தீங்களா… சர்பத்துங்க.. போர்ன்விடா மாதிரி இருக்குங்க’ என்று அவர் சொல்வதைக்கேட்டு அவ்வளவுபேர் அங்கே படையெடுத்தால் என்ன ஆவது?

தங்கபாண்டியின் இன்ஸ்டா பக்கத்துக்குப் போய்பார்த்தோம். இந்த அகில உலக பஞ்சாயத்துக்குப் பின் புதிய  வீடியோ ஏதும் இல்லை. சும்மா கிராமத்தில் சுற்றித் திரிந்து குளியல் நொங்கு சாப்பிடுதல், மாடுகள், விவசாயம் என கிராமத்து பாஷையில் கூமாப்பட்டியின் பெருமையை எதெற்கெடுத்தால் இழுத்துப் பேசிக்கொண்டே இருக்கிறார். சுமார் 500 வீடியோக்கள் போட்டிருக்கிறார்.  தண்ணியில் குளித்துக்கொண்டே கூமாப்பட்டி உதார் விடும் வீடியோக்கள் மில்லியன் கணக்கில் வியூ போயிருக்கின்றன.

” ஏங்ங்க.. இந்த தண்ணியப் பாருங்க.. உங்களுக்கு ல்வ் பெயிலியரா..? கஷ்டமா இருக்கா.. இங்க வந்து குளிங்க எங்க ஊருக்கு வாங்க. அதுக்கு ஒரு அருமருந்து இருக்கு.. அதுதான் கூமாபட்டி மூலிகைத் தீர்த்தம்ங்க” என்று அவர் சொல்லும் வீடியோவை மட்டும் 60 லட்சம் பார்வைகள் தீண்டி இருக்கின்றன.

“அடேய் இருடா.. காசு இல்லடா. கடன் வாங்கிட்டாவது வரேண்டா  உங்க ஊருக்கு..’’ என்று ஒருவர் கமெண்ட் போட்டிருக்கிறார்.

 ‘’கூமாபட்டியை தனி நாடாக அறிவித்தது ஐநா சபை’’ என்பது இன்னொரு கமெண்ட்.

விருதுநகரில் கலெக்டராக இருந்து மாறுதலாகிப்போகும் ஜெயசீலன் மக்களிடம் விடைபெறுவதற்கு முன் இந்த கூமாபட்டி புயலைவேறு எதிர்கொள்ள வேண்டி இருந்தது. போய்ப்பார்த்து போட்டோ எடுத்து ட்விட்டரில் போட்டிருக்கிறார். அவர் எழுதியதாவது:

”நேற்றிலிருந்து நண்பர்கள் அழைத்து என்னடா விருதுநகர் கலெக்டராக இருந்து இப்படி இன்டர்நேஷனல் Exotic Destination கூமாபட்டிய எங்களிடம் காட்டாமல் விட்டு விட்டாய் என்று கோபித்துக் கொண்டார்கள்‌!

எனக்கே கொஞ்சம் அதிர்ச்சியாதான்டா இருக்கு பொறுங்க நாளைக்கு சும்மாதான் இருப்பேன். போய் பார்த்து போட்டோ எடுத்து போடுறேன் என்று சொன்னேன்.. கூமாபட்டி, ஸ்ரீவில்லிபுத்தூருக்கு மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தை ஒட்டி அமைந்துள்ள அழகான ஊர். பிளவக்கல் கோவிலாறு அணைகளுக்கு அருகில், இரண்டு மிகப்பெரிய கண்மாய்களையும் கொண்ட ஆயக்கட்டுகள் நிறைந்த ஊர். மழைக்காலத்தில் கம்மாய்கள் நிரம்பி, கடல் போல் நிறைந்து, இயற்கை எழில் சூழ மிகுந்த ரம்மியமாய் காட்சியளிக்கும்.

அந்த வைரல் வீடியோவில், தலைவன் சொன்னதை போல் காதல் தோல்விக்கு தீர்த்தமாகவோ, இல்லை காதல் செட்டாவதற்கு தைலமாகவோ இருக்குமா என்பது குறித்து ‌எந்த ஆவணக் குறிப்புகளும் இல்லை. தலைவனின் மற்ற தகவல்கள் 'ரீல்'ஸ்காக மட்டுமே‌! மற்றபடி, இது போன்ற கிராமப்புற பகுதிகளில் இயற்கை எழில் சூழ்ந்த இடங்களில் கிராம சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், அழுத்தமான நகர்ப்புர வாழ்வியலில் இருந்து இளைப்பாறவும் 100 சதவீத கியாரண்டி உள்ள‌இடம். எதிர்காலத்தில் இது‌ கிராமச் சுற்றுலா வசதிகளுடன் மேம்பாடு அடையும் என எதிர்பார்க்கலாம்! கூமாபட்டி கண்மாயின் இன்றைய புகைப்படங்கள், கடைசி படம் கடந்த ஆண்டு நீர் நிரம்பியிருந்தபோது நான் எடுத்தது! மிகவும் ரம்மியமான
பகுதி !!’’

கூமாபட்டியில் ஜெயசீலன் ஐஏஎஸ்
கூமாபட்டியில் ஜெயசீலன் ஐஏஎஸ்

கலெக்டரையே கதற அடித்த கூமாபட்டி இளைஞர் தங்கபாண்டியை வார இதழ் ஒன்றில் பேட்டியும் எடுத்திருக்கிறார்கள். பிஎட் படித்துவிட்டு வேலை தேடிக்கொண்டிருக்கிறார். ஓர் அடி தடி வழக்கில் தேவையில்லாமல் சிக்க வைத்துவிட்டதால் வீணாக நீதிமன்றத்துக்கு அலைந்துகொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மெரினாவுக்கு வந்தவர் இங்கேயும் ஒரு வீடியோ எடுத்துப் போட்டுள்ளார். ’’ஏங்க.. மெரீனா சூப்பரா இருக்கு. இதுபோல எங்க கூமாப்பட்டிக்கும் ஒரு கடற்கரை வேணுங்க.. சி.எம்.கிட்ட கேட்கணும்க…’ என்ற ரீதியில் போகிறது.

விருதுநகர்க்காரர்கள் எல்லாம் என்ன சார் இந்த கூமாபட்டி எங்க இருக்கு என்றால்’எங்களுக்கே தெரியலையேப்பா?’ என்று நடிகர் திலகம் சிவாஜி ரெஞ்சில் கண்ணைக் கசக்குகிறார்கள். எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் வாசகர் ஒருவர் மட்டும்,” கூமாபட்டிக்கு வெளியே நல்லதங்காள் குழந்தைகளைப் போட்டு கொன்றதாய் நம்பப்படும் கிணறு இருக்கு.. இதுபற்றி தேசாந்திரியில் எஸ்.ரா. எழுதி இருக்காங்க” என்று நினைவுகூர்ந்தார்.

கூமாபட்டி மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை!
கூமாபட்டி மீம்ஸ்களுக்கு பஞ்சமே இல்லை!

அய்யா சாமிகளே.. ஊர்ப்பாசம் எல்லோருக்கும் இருக்கு. கூமாபட்டிக்காரர் போல தமிழ்நாட்டின் மூலை முடுக்கில் இருக்கும் ஊர்க்காரங்கள்லாம் களமிறங்கிடாதீங்கய்யா.. இன்ஸ்டா தாங்காதுய்யா.

அது மட்டுமல்ல.. இந்த பாலிமர் டிவிகாரங்க எல்லா ஊருக்கும் வந்து விரட்டிவிரட்டி செய்தி அடிக்காம விடமாட்டாய்ங்கப்பூ!

logo
Andhimazhai
www.andhimazhai.com