கும்பகோணம் கல்லூரி காலவரையறையின்றி மூடல்! - என்ன காரணம்?
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் கடந்த 6 நாள்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்த்துறை முதுகலை இரண்டாம் ஆண்டு வகுப்பில் பேராசிரியை ஒருவர், மாணவர்களிடையே ஜாதி பிரிவினை பற்றி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் கடந்த ஆகஸ்ட் 8இல் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். பின்னர் அந்த பேராசிரியை விடுப்பில் சென்றார். ஆனாலும் துறை ரீதியாக பேராசிரியை மீது பணியிடை நீக்கம் மற்றும் இடமாற்றம் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.
இது தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்படாததால், கடந்த 19-ஆம் தேதி முதல் வகுப்புகளை புறக்கணிக்கும் போராட்டத்தை தொடங்கினர். கடந்த 6 நாட்களாக மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், கல்லூரியின் அசாதாரண சூழல் கருதி கல்லூரி ஆட்சிமன்றக் குழுவின் தீர்மானத்தின்படி மறு உத்தரவு வரும் வரை கல்லூரி காலவரையறையின்றி முட்டப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.