தமிழ்நாட்டின் சிறந்த யானையாக கும்பகோணம் மங்களம் தேர்வு!

தமிழ்நாட்டின் சிறந்த யானையாக கும்பகோணம் மங்களம் தேர்வு!

கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்திற்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதானது லோக்தந்த்ரா அவுர் ஜந்தா சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர் கோயிலுக்கு, கடந்த 1982ஆம் ஆண்டு, காஞ்சி மகாப்பெரியவர், மங்களம் யானையை வழங்கினார். யானை மங்களத்திற்கு தற்போது 56 வயதாகிறது. வயது மூப்பின் காரணமாக மங்களத்திற்கு இயற்கை மூலிகைகள், உடற்பயிற்சிகள் உள்ளிட்டவைகள் அதன் ஆரோக்கியத்திற்காகவும், வைட்டமின் சத்துக்காகவும் வழங்கப்பட்டு வருகிறது.

அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழுள்ள இந்த கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் யானை மங்களத்திற்கு, சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருதை, மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் நேற்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன், அஜீத் குமார் ஆகியோர் கோயில் செயல் அலுவலர் கோ.கிருஷ்ணக்குமார் மற்றும் யானை மங்களம் பராமரிப்பாளரும், பாகனுமான அசோக்கிடம் நினைவுப் பரிசு மற்றும் விருதுகளை வழங்கினர்.

இது தொடர்பாக அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் சுதன் பாலன் கூறியது, "தமிழகத்தில் உள்ள யானைகளை ஆண்டுதோறும் முதுமலை யானைகள் புத்துணர்ச்சி முகாமிற்குச் சென்று வந்தன. ஆனால் 2005ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த முகாமிற்கு யானைகள் செல்லவில்லை.

இதனையொட்டி, அந்த யானைகளின் பராமரிப்பு, சுற்றுப்புறச்சூழல், யானையை கவனிப்பது உள்ளிட்ட அதற்கு தேவையான அனைத்தையும் முறையாக நடைபெறுகிறதா என ஆய்வு மேற்கொள்ள, மத்திய அரசு அங்கீகாரம் பெற்ற புதுடெல்லியைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவன லோக்தந்த்ரா அவுர் ஜந்தா அமைப்பின் சார்பில் கடந்த 4 மாதங்களாக தமிழகத்தில் உள்ள 34 யானைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், தமிழகத்திலேயே, தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயில் யானை மங்களத்தைச் சிறப்பாக பராமரிப்பதும், தூய்மையான சுற்றுப்புறச்சூழல், யானையை முறையாக, கருத்தாக கவனிப்பது உள்ளிட்டவைகள் அனைத்தும் சிறப்பாக இருந்ததால், இந்த யானைக்கு சுறுசுறுப்பு யானைக்கான சிறப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.மேலும், மற்ற யானைகளை சிறப்பாக பராமரிக்கப் பரிந்துரைக்கப்பட்டது" என்று அவர் கூறினார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com