அமர்நாத் ராமகிருஷ்ணா மீது நடவடிக்கையா?- கி.வீரமணி கண்டனம்

அமர்நாத் ராமகிருஷ்ணா
அமர்நாத் ராமகிருஷ்ணா
Published on

கீழடி தொடர்பாக தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணா மீது அழுத்தம் கொடுப்பதுடன் நடவடிக்கை எடுக்கவும் முயல்வதாக தி.க. தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

“ இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை மற்றும் நினைவுச்சின்னங்கள் & தொல்பொருள்கள் குறித்த தேசிய இயக்கத்தின் (என்எம்எம்ஏ) இயக்குநர் கே. அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு கீழடி ஆய்வு அறிக்கையில் அதன் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைத்த திருத்தங்களைச் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

2014-2016 காலகட்டத்தில் கீழடி அகழாய்வின் முதல் இரண்டு கட்டங்களை வழிநடத்திய அமர்நாத் ராமகிருஷ்ணா, கி.மு.800-500 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்த ஒரு பழைமையான நகரத் தமிழ் நாகரிகத்தின் சான்றுகளை கண்டறிந்ததாக அறிக்கை வெளியிட்டிருந்தார்.

ஆனால், ஏஎஸ்அய் மேற்கொண்ட முக்கிய மதிப்பீட்டுக் குழு (critical evaluation) அந்த அறிக்கையை 'தெளிவற்றது, முழுமையற்றது மற்றும் போதிய விளக்கமற்றது' என விமர்சித்திருந்தது.

இதற்கு பதிலளித்த ராமகிருஷ்ணா, ஏஎஸ்அய்யின் மதிப்பீடு, துல்லியமற்றது; செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) உதவியுடன் தயாரிக்கப்பட்டதாக தோன்றுகிறது' என குறிப்பிட்டிருந்தார்.
பின்னர், மார்ச் 27 ஆம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஏஎஸ்அய், அவரது பதிலை மறுபரிசீலனை செய்து, அகழாய்வு அறிக்கையில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. ஏஎஸ்அய் அகழாய்வுப் பிரிவு இயக்குநர் ஹெம்சாகர் ஏ. நாயக், ராமகிருஷ்ணா உடனடியாக இணக்க அறிக்கையை (compliance report) சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

ஒழுங்கு நடவடிக்கை பாயுமாம்!

கடந்த மார்ச் 17 அன்று நடைபெற்ற ‘நாடாளுமன்ற கேள்விகள்' தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் முன் அறிவிப்பின்றி கலந்து கொள்ளாதது உள்ளிட்ட காரணங் களால், 'கட்டாய உத்தரவுகளை மீறல், கடமையின்மை மற்றும் ஒழுங்கு மீறல்' ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் ராமகிருஷ்ணாவுக்கு குறிப்பாணை அனுப்பியுள்ளது.

அந்த குறிப்பாணையில், 'உங்களது செயல்பாடு, திட்டமிட்ட கட்டுப்பாடு இன்மை, கடுமையான அலட்சியம் மற்றும் பணி ஒழுங்கு இல்லாமை எனப் பார்க்கப்படுகிறது. இது துறை சார்ந்த ஒழுங்கு விதிகளை மீறுவதாகும்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒன்றிய அரசின் மத்திய குடிமைப் பணிகள் விதிகள் (1965) விதிகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் எச்சரித்துள்ளது.

இந்த அறிவிப்பிற்கு ஏழு நாள்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டுள்ளதுடன், பதில் வராத பட்சத்தில் கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– இப்படி ஒரு திணிப்புக்கான முயற்சி ஒரு ஜனநாயக நாட்டில் நடைபெறுவது ஏற்புடையதா? மகாமகா வெட்கக்கேடு அல்லவா?

ஓர் அனுபவம் மிக்க தொல் பொருள்துறை கண்காணிப்பாளர் – தனது புதைபொருள் தரவுகளைக் கொண்டு – தக்க காரண, காரியங்களை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்து தந்துள்ள, வருங்காலத்தில் வரலாற்று முக்கியத்துவம் பெறப்போகும் ஓர் ஆவணம் போன்ற அறிக்கை தங்களது ஆர்.எஸ்.எஸ். கொள்கைகளுக்கு ஒத்த வகையில் அது இல்லையென்ற ஒரே காரணத்தால், ‘‘மாற்றி, திருத்தி எழுதி அனுப்புங்கள். இதில் நீங்கள் பிடிவாதம் காட்டினீர்கள் என்றால், உங்கள் மீது கடும் நடவடிக்கை பாயும்’’ என்று அச்சுறுத்துவது நியாயமா? நேர்மையா? நீதியா?  சட்டப்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதா?
இத்தகைய அச்சுறுத்தல், உடற்கூராய்வு (Post Mortem) செய்யப் பணித்து பொறுப்பை வழங்கிய டாக்டரிடம், ‘‘எங்கள் கருத்துக்கேற்ப இல்லை, அது கொலை அல்ல, இயல்பான மரணம்  என்று அதற்கேற்ப உங்களது அறிக்கையை மாற்றி எழுதுங்கள்; இல்லையேல், உங்களைத் தண்டிப்போம்’’ என்று மிரட்டி, பணிய வைப்பது போன்ற அருவெறுப்பானதும், அரசியலமைப்புச் சட்ட மீறலும் அல்லவா இது?


‘திராவிட மாடல்’ ஆட்சியின் லட்சிய முதலமைச்சர் ஒவ்வொரு வாய்ப்பிலும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. ஆட்சியில் இந்த ‘ஆரியத்தனம்’ பற்றி தனது கண்டனத்தினைப் பதிவு செய்து உள்ளார்.

கீழடி ஆய்வு அறிக்கை தந்த திரு.அமர்நாத் ராமகிருஷ்ணா அவர்கள், கற்றுத் துறைபோகிய, அகழ்வாராய்ச்சியில் தலைசிறந்த விற்பன்னர்!

தனது அறிக்கையை மாற்றி எழுதித் தர முடியாது என்று அவர் பதிலளித்துள்ளது – கடமை தவறாத, மாறாக கருத்துரிமை மற்றும்  உண்மையின் பக்கமே என்றும் நிலைத்து நிற்கக்கூடிய அடிப்படை ஜீவாதார உரிமையே ஆகும்!

நாடு தழுவிய கண்டனங்கள் ஒத்தக் கருத்துள்ள அனைவராலும் ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை நோக்கி எழுப்பப்படவேண்டும்.

திராவிட நாகரிகம் – வேத கால நாகரிகத்தைவிட முந்தையது என்று ஆகிவிடக் கூடாது என்ற ஆர்.எஸ்.எஸ். கருத்தியலுக்கு எதிரானது கீழடிபற்றிய இந்த உள்ளடி!


ஏப்ரல் 23 ஆம் தேதி வாக்குப் பதிவு முடிந்து, ஓட்டுகள் எண்ணப்படும் மே 4 ஆம் தேதி இடைவெளியில் இதற்கென ஒரு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை சென்னையில் நடத்திட, ஒத்த கருத்துள்ளவர்கள், கண்காணிப்பாளர்களை அழைப்பதற்கு திராவிடர் கழகம் உரிய முடிவு செய்யும்.

அதிகாரியைப் ‘பலிகடா’ ஆக்கும் கசாப்புத் தனத்திற்கு சிறிதும் இடந்தர அனுமதியோம்!” என்று கி.வீரமணி  கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com