பிஎச்.டி.க்கும் தேசிய நுழைவுத் தேர்வா?- மாநில உரிமைக்கு மீண்டும் படுகுழி என வீரமணி கண்டனம்!

தி.க. தலைவர் கி.வீரமணி
தி.க. தலைவர் கி.வீரமணி
Published on

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து மனிதனைக் கடித்தது போல், இனி பிஎச்.டி.,க்கும் நுழைவுத் தேர்வு என மத்திய அரசு அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

”அங்கே கடித்து... இங்கே கடித்து... இப்பொழுது ஆய்வு மாணவர்களைக் குறிவைக்கிறது பா.ஜ.க. அரசு. மருத்துவக் கல்வியில் நுழைவதற்கு நீட் என்னும் கொடும் நுழைவுத் தேர்வைத் திணித்து, அதன் மூலம் ஒடுக்கப்பட்ட, எளிய மக்களின் மருத்துவக் கனவைச் சிதைத்து, பெரும் வணிகத் தளமாக மாற்றியிருப்பதைப் போலவே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கு கியூட் என்னும் நுழைவுத் தேர்வைத் திணித்துள்ளது.

அடுத்த கட்டமாக, இப்போது மாநிலப் பல்கலைக் கழகங்களின் உரிமையிலும் தலையிட்டுள்ளது ஒன்றிய அரசு. பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்ட (பிஎச்.டி.,) ஆய்வு மாணவர் இடங்களுக்கு, அந்தந்தப் பல்கலைக்கழகங்களே தேர்வு நடத்தி மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்கின்றன.

ஆனால், முனைவர் பட்ட ஆய்வு மாணவராக ஒரு பல்கலைக்கழகம் தன் மாணவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கும் இனி அதற்கு உரிமையில்லை. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency) நடத்தும் National Eligibility Test (NET) தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிஎச்.டி.க்கு விண்ணப்பிக்க முடியும் என்ற நிலைமையை, வரும் 2024-2025 ஆம் கல்வியாண்டு முதல் கொண்டுவர முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கடந்த 27.3.2024 அன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது, பல்கலைக் கழக மானியக் குழு.

அந்தந்த மாநிலத்தவர், அந்தந்த மாநிலப் பல்கலைக்கழகங்களில் முனைவர் பட்டம் பெறவும், இனி தேசிய நுழைவுத் தேர்வு எழுத வேண்டுமாம்.

அதிலும் மூன்று வகையான நெட் தேர்வுகள் இருக்குமாம்.

1. JRF எனப்படும் உதவித் தொகையுடன் கூடிய பிஎச்.டி.,யும் உதவிப் பேராசிரியர் தகுதிக்குமான தேர்வு

2. உதவித் தொகை அல்லாமல், பிஎச்.டி.,க்கும் உதவிப் பேராசிரியர் தகுதிக்குமான தேர்வு.

3. உதவித் தொகையும் இல்லாமல், உதவிப் பேராசிரியர் தகுதிக்கும் இல்லா மல், பிஎச்.டி., மட்டும் படிப்பதற்கான தகுதித் தேர்வு.

தற்போது ஆண்டுக்கு இரு முறை நடத்தப்படும் நெட் தேர்வுகள், ஆய்வு மாணவர்கள் ஜே.ஆர்.எஃப் உதவித் தொகை பெறுவதற்கும், ஆய்வுப் படிப்பு மேற்கொள்ளாத முதுநிலை மாணவர்கள் உதவிப் பேராசிரியர் படிப்புக்குத் தகுதி பெறுவதற்கும் மட்டும் நடைபெற்று வருகிறது.

இனி, வெறும் பிஎச்.டி. அதனுடன் உதவிப் பேராசிரியர், அதனுடன் ஜே.ஆர்.எப். என்று மூன்று பிரிவுகளில் நடத்தப்படும். அதுவும் ஜூன் 2024 முதல் இந்த நடைமுறை உடனடியாக அமலுக்கு வருகிறதாம்.

மாநிலப் பல்கலைக்கழகங்களின் மாணவர் சேர்க்கை விவகாரத்தில் ஒன்றிய அரசுக்கோ, பல்கலைக்கழக மானியக் குழுவுக்கோ எந்த உரிமையும் கிடையாது என்று அரசமைப்புச் சட்ட ரீதியாகத் தெரிந்திருந்தும், தொடர்ந்து இத்தகைய உரிமை மீறல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ் அரசு.

கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படுவது ஒன்றே இவற்றுக்குத் தீர்வாக அமைய முடியும்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் புதிய புதிய பிரச்சினைகளை நம் தலையில் கட்டிக்கொண்டிருக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராகத் தனித்தனியாகப் போராடிக் கொண்டிருக்காமல், ஒட்டுமொத்தமாக, பாசிசத்துக்கு எதிராக ஓட்டு வழங்குவதன் மூலம் பா.ஜ.க.வையும், ஆர்.எஸ்.எஸ்.சின் அதிகார அரசியலையும் ஒழித்துக் கட்டுவதுதான் தீர்வாக இருக்க முடியும்.

மாணவர்களும், பெற்றோர்களும், கல்வி ஆர்வலர்களும், சமூகநீதி உணர்வாளர்களும் செல்லவேண்டிய திசை என்ன என்பதை நம் எதிரிகளே தெளிவாகக் காட்டுகிறார்கள்.” என்று வீரமணி கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com