இது ஓவருங்க - அமைச்சருக்கு கி.வீரமணி ’குட்டு’!
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ஆர்வம் மிகுதியாகச் (ஓவராக) செயல்பட்டுவிட்டதாக தி.க. தலைவர் கி.வீரமணி கூறியிருக்கிறார்.
பழனியில் நடைபெற்ற முத்தமிழ் முருகன் மாநாட்டின் சில தீர்மானங்கள் தொடர்பாக ஏற்கெனவே தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான வி.சி.க., மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை அதிருப்தியும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தன. அதைத் தொடர்ந்து, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியும் இன்று தன்னுடைய எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அவரின் இன்றைய அறிக்கை விவரம்:
“பாராட்டவேண்டிய நேரத்தில் மனந்திறந்து பாராட்டுவது போலவே, சறுக்கல் நேரும் நேரத்தில் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டியதும் தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் முக்கிய கடமையாகும்.
முருகன் மாநாட்டுத் தீர்மானங்கள்
அனைத்துலக முருகன் மாநாட்டில் 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
அதில் 8 மற்றும் 12 ஆவது தீர்மானங்கள் விமர்சனத்துக்கு உரியவையாகும்.
8 ஆவது தீர்மானம்:
‘‘கந்த சஷ்டி விழாக்காலங்களில் அருள்மிகு முருகன் திருக்கோவில்களில் மாணவர், மாணவியர்களைக் கொண்டு கந்தசஷ்டி பாராயணம் செய்விப்பது என்று தீர்மானிக்கப்படுகிறது.’’
12 ஆவது தீர்மானம்:
‘‘முருகப் பெருமானின் பெருமைகள் மற்றும் இலக்கியங்கள் குறித்து இந்து சமய அறநிலையத் துறையின் ஆளுகையின்கீழ் உள்ள திருக்கோவில்களின் சார்பில் நடத்தப்படும் கல்லூரிகளில் சிறப்பு ஆன்மிகப் பாடப் பிரிவுகளை ஏற்படுத்த அரசுக்குப் பரிந்துரைக்கலாம் என்று தீர்மானிக்கப்படுகிறது.’’
இந்த இரண்டு தீர்மானங்களையும் எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்?
இந்து அறநிலையத் துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் மதச் சார்புடையன அல்ல!
நமது தி.மு.க. அரசின் கொள்கை என்பது மதச் சார்பற்ற தன்மை கொண்டதாயிற்றே!
தி.மு.க. அங்கம் வகிக்கும் இந்தியா கூட்டணிக்குக் கூட மதச்சார்பற்ற கூட்டணி என்றுதானே பெயர் – இதற்குமேல் விளக்கத் தேவையில்லை.
முதலமைச்சர் காணொலி உரையில் முடிவாக ஒன்றை அழுத்தமாகக் குறிப்பி்ட்டுள்ளார்.
‘‘ஆலய வழிபாடுகளில் தமிழ்மொழி முதன்மை பெற வேண்டும்! திருக்கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும். அன்பால் உயிர்கள் ஒன்றாகும்! உலகம் ஒன்றாகும்.’’
(‘முரசொலி’, 25.8.2024, பக்கம் 4).
இது முத்தாய்ப்பான கொள்கை ரீதியான முத்திரையடியாகும்.
அந்த வகையில், மாநாடு நடைபெற்ற முருகன் கோவிலிலேயே தொடங்குவது பொருத்தமானதாக இருக்க முடியும்.
தமிழிலும் அர்ச்சனை என்ற உம்மை இழிவு சிறப்பை நீக்கி, தமிழ்நாட்டுக் கோவில்களில் தமிழை வழிபாட்டு மொழியாக ஆக்குவதற்கு இந்து அறநிலையத் துறை உறுதியாக முன்வரவேண்டும்.
கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிலவவேண்டும் என்ற அடிப்படையில் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ‘திராவிட மாடல்’ அரசின் மனிதத்துவ சிந்தனையை செயல்படுத்தவேண்டும். இது ஒரு கட்டத்தோடு நின்றிருக்கிறது. இதனை முழுமையாக நிறைவேற்றி, மாண்புமிகு முதலமைச்சர் காணொலியில் குறிப்பிட்ட, கோவில் கருவறைக்குள் மனிதருக்கிடையே பாகுபாடு காட்டாத சமத்துவம் நிறைவேற்றப்படவேண்டும்.
உண்மை வரலாற்றின் அடிப்படையில், ‘‘அனைத்து முத்தமிழ் முருகன் மாநாடு’’ நடத்தப்பட்டுள்ள இந்தத் தருணத்தில், பழனி முருகன் கோவிலில் அர்ச்சகர் நியமனம் செய்யப்படுவது பொருத்தமானதாகும். அதிலும் தற்போது மிஞ்சியது ஏமாற்றமே!
இந்து அறநிலையத் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.பி.கே.சேகர்பாபு, சிறந்த செயல்வீரர் என்பதால், செயல்பாபு என்றே நம் முதலமைச்சர் பாராட்டினார்.
அதைவிட இப்போது ஒன்றைச் சுட்டிக்காட்டுவதும் அவசியமாகும்.
‘‘கோவில் துறையைப் பாதுகாக்க அவரிடம் பொறுப்பை ஒப்படைத்தேன். அவர் இப்போது கோவிலிலேயே குடியிருக்கிறார்! என்று கூறியதன்மூலம், அவர் தனது துறைப் பணிகளில் தேவையான ஆர்வம் தாண்டி செய்கிறார். over enthusiastic ஆக இருக்கவேண்டாம் – கூடாது – இது ‘இடிப்பாரை' – உள்நோக்கமின்றி!
முக்கியமாக அவரைப் பாராட்ட – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் நியமன உச்சநீதிமன்றத் தடை இன்னும் நீங்காது தொடரும் நிலை மாறவேண்டும்.
அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் – நியமனங்கள், புதிய மாணவர் சேர்க்கைகள் போன்ற பணிகளில் அவர் தீவிரம் காட்டவேண்டும் என்று சொல்வது நமது உரிமையாகும்.” என்று வீரமணி கூறியுள்ளார்.