
அம்மோனியா கசிவால் வடமாநிலத் தொழிலாளர்கள் இதுவரை 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தத் துயர சம்பவம் குறித்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் இன்று காலையில் சட்டப்பேரவையில் 110ஆவது விதியின்படி விளக்க அறிக்கையை அளித்தார்.
அதில் கூறியிருப்பதாவது:
“ திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் 21.06.2026 அன்று [St Peter & Paul Sea Food Exports Private Limited (Registration No: TVR08603) என்ற தனியார் கடல் உணவுகளை பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில், ice flakes generator machine-க்கு செல்லும் பைப்லைன் வால்வில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தின் காரணமாக அமோனியா வாயு கசிவு ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தின் காரணமாக, இதுவரை அங்கு பணியாற்றும், அந்த வளாகத்தில் தங்கியிருந்த 74 நபர்கள் (70 பெண்கள்,
4 ஆண்கள்) பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 15 நபர்கள் அரசு மருத்துமனையிலும்,
27 நபர்கள் தனியார் மருத்துவமனையிலும், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளனர். 27 நபர்கள் சாதாரண சிகிச்சையில் உள்ளனர். சிகிச்சை பெற்று வரும் அனைவருக்கும் சிறப்பான மருத்துவ சிகிச்சை வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்தில் துரதிருஷ்டவசமாக 5 பெண்கள் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டறிந்து முதலமைச்சர் மிகவும் வேதனை அடைந்து, அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, முதலமைச்சர் பொது நிவாரண நிதிலிருந்து தலா 2 இலட்சம் ரூபாய் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அவர்களின் உடல்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்பி, நல்லடக்கம் செய்வதற்கான செலவினை அரசே மேற்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ்விபத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கவும் முதலமைச்சர் உத்தவிட்டுள்ளார்.
மேலும், இவ்விபத்தில் உயிரிழந்து மற்றும் பாதிப்படைந்த தொழிலாளர்களுக்கு, தொழிலாளர்கள் மாநில ஈட்டுறுதி காப்பீட்டு திட்டம் (ESI), வருங்கால வைப்பு நிதியை (PF) உடனடியாக வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இவ்விபத்து குறித்து இயக்குநர், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை, இயக்குநர், பொது சுகாதாரத் துறை மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் - செயலர் அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விசாரணையை 3 நாட்களுக்குள் சமர்ப்பிக்குமாறு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இனிவரும் காலங்களில், இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, அபாயகரமான தொழிற்சாலைகளை உடனடியாக குழு அமைத்து ஆய்வு செய்யவும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில், உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.” என்று அமைச்சர் பர்வேஸ் கூறினார்.