எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவு - மு.க.ஸ்டாலின், தலைவர்கள் இரங்கல்!

புகழேந்தி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர்
புகழேந்தி, விக்கிரவாண்டி சட்டப்பேரவை உறுப்பினர்
Published on

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் புகழேந்தியின் மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

”தி.மு.க.வின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அன்புச் சகோதரர் புகழேந்தி எதிர்பாராத வகையில் மறைவுற்ற நிகழ்வு, மிகவும், அதிர்ச்சியும் வேதனை தருகிறது.

கடந்த சில நாள்களாக உடல்நலம் குன்றியிருந்த அவர், தன் உடல்நலன் பற்றியெல்லாம் சிந்திக்காமல் கழகத்தின் வெற்றிக்காகத் தேர்தல் பணிகளை ஆற்றி வந்தார். நேற்றைய என்னுடைய பரப்புரைக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த அவர், சற்றே மயக்கம் வர, மருத்துவமனைக்குச் சென்றார். உடனடியாக நானும் மருத்துவர்களைத் தொடர்புகொண்டு, அவரது உடல்நலனைக் கவனித்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டிருந்தேன். நலன் பெற்று மீண்டு வருவார் என்று நம்பியிருந்த நிலையில், அவர் நம்மைவிட்டு பிரிந்த செய்தி வந்து நம்மைத் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

1973-இல் கழகத்தின் கிளைச் செயலாளராகத் தமது அரசியல் வாழ்வைத் தொடங்கிய திரு. புகழேந்தி அவர்கள், தமது அயரா உழைப்பாலும், மக்கள் பணியாலும் படிப்படியாக வளர்ந்து, கழகத்தின் மாவட்டச் செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உயர்ந்தார்.

1996-இல் ஒன்றியத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான பணிகளை மேற்கொண்டவர். விக்கிரவாண்டி தொகுதி மக்களோடு, மக்களாக இருந்து அவர்களுக்கான அனைத்துப் பணிகளையும் அக்கறையுடன் மேற்கொண்டு வந்த திரு. புகழேந்தி அவர்களைச் சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுத்து அந்த மக்கள் அனுப்பி வைத்தனர்.

எப்போது என்னைச் சந்திக்க வந்தாலும், தொகுதி மக்களுக்கான கோரிக்கைகளுடன்தான் வருவார். அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுச் செல்வார். கழகத் துணைப் பொதுச் செயலாளர் முனைவர் க.பொன்முடி அவர்களுக்கு உற்ற துணையாக விளங்கி - மக்களோடு மக்களாக வாழ்ந்த புகழேந்தி அவர்களது மறைவு, விக்கிரவாண்டி தொகுதிக்கும், விழுப்புரம் மாவட்டத்திற்கும் மட்டுமின்றி, கழகத்திற்கும் பேரிழப்பாகும்.

ஈடுசெய்ய முடியாத அவரது பேரிழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் மற்றும் கழகத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி

”விக்கிரவாண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தோழர் புகழேந்தி அவர்கள் (வயது 71) உடல் நலக் குறைவு ஏற்பட்டு, திடீரென்று இன்று (6.4.2024) காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தோம்.


அருமை சகோதரர் அமைச்சர் க.பொன்முடி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தோழமையுடன் இருந்து, இயக்கத்தின் கட்டுப்பாடும், கடமை உணர்வும் கொண்ட கொள்கைப்பூர்வமான கண்ணியம் மிக்கவராக வாழ்ந்தவர். எவரிடமும் நட்புரிமையுடனும், பண்புடனும் பழகுபவர்.

நம்மிடம் மிகுந்த அன்புடனும், பாசத்துடனும் பழகி வந்தவர்.
அவருடைய திடீர் மறைவு அப்பகுதி மக்களுக்கும், திராவிடர் இயக்கத் தோழர்களுக்கும், அவரது குடும்பத்திற்கும் மிகப் பெரிய ஈடு செய்ய இயலாத பெருத்த நட்டமாகும்.”

பா.ம.க. நிறுவனர் இராமதாசு

”விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், விக்கிரவாண்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

இளம் வயதிலிருந்தே திமுகவில் இணைந்து மாவட்ட செயலாளர், சட்டப்பேரவை உறுப்பினர் ஆகிய பதவிகளை வகிக்கும் அளவுக்கு உயர்ந்த புகழேந்தி, அனைவரிடத்திலும் நன்றாக பழகக்கூடியவர். என் மீது மிகுந்த மதிப்பும், மரியாதையும் கொண்டவர். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த புகழேந்தி நலம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவரது மறைவு அதிர்ச்சியளிக்கிறது.”


ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ

"திராவிட முன்னேற்றக் கழகத்தின் விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி அவர்கள் நேற்று இரவு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். என் ஆழ்ந்த இரங்கல்."

இந்தியக் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்

"விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் புகழேந்தி (71) காலமான செய்தி அறிந்து வேதனை அடைந்தோம்.

திராவிட இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இளம் வயதிலேயே கிளைக் கழகத்தின் மூலம் பொது வாழ்வை தொடங்கியவர்.

ஊராட்சி மன்றத் தலைவர், கூட்டுறவு சங்க தலைவர், ஒன்றிய ஊராட்சிக் குழுத் தலைவர் என பல்வேறு நிலைகளில் மக்கள் பிரதிநிதியாக செயல்பட்டவர். பரந்துபட்ட மக்களின் செல்வாக்கை பெற்றவர்.

ஜனநாயக அமைப்பை பாதுகாக்க தேர்தல் களப் பணி தீவிரமாகி வரும் சூழலில் அவரது மறைவு பேரிழப்பாகும்."

மார்க்சிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்

” விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றிய  நா.புகழேந்தி உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனையளிக்கிறது. அவரது மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

மறைந்த திரு நா. புகழேந்தி அவர்கள் எளிமையானவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுடன் இனிமையாக பழகக் கூடியவர். அவரது மறைவு விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி மக்களுக்கு பேரிழப்பு.

logo
Andhimazhai
www.andhimazhai.com