தலைமைத் தேர்தல் ஆணையர் விவகாரம்.... களமிறங்கும் இடதுசாரி கட்சிகள்!

Left wing parties announced protest
இடதுசாரி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on: 

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி அக்டோபர் 1 அன்று தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளதாக இடதுசாரிக் கட்சிகள் அறிவித்துள்ளன.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கை:

"இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை ஆகிய இடதுசாரி கட்சிகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகின்றன.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மூன்று தேர்தல் ஆணையர்கள் கூட்டாக ஒருமனதாக முடிவு எடுத்து செயல்பட வேண்டும்.

ஆனால், சர்வாதிகாரப்போக்கோடு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் செயல்பட்டுள்ளார்.

ஒன்றிய பா.ஜ.க. அரசின் விருப்பங்களுக்கு ஏற்ப செயல்பட்டுள்ளார். சுதந்திரமான, நியாயமான தேர்தல் நடைமுறைகளை சீர்குலைத்துள்ளார்.

தலைமைத் தேர்தல் ஆணையரின் அதிகார அத்துமீறல் ஒன்றிய அரசின் கவனத்துக்கு கொண்டுவரபட்டும், அது கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளது.

இரண்டு தேர்தல் ஆணையர்களின் ஆட்சேபணைகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம்  முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, பல்வேறு மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் 13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்களின் பெயர்கள் வரைவு வாக்காளர் பட்டியல்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

ஒன்றிய ஆளும் கட்சியான பா.ஜ.க. சுதந்திரமான தேர்தல் என்பதை அர்த்தமிழக்க செய்து விட்டது.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பிக்கையையும், நம்பகத்தன்மையையும் மீட்டெடுக்க, அவர் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும்.

இந்தியத் தேர்தல் ஆணையம் எடுத்துள்ள முடிவுகளையும், அவை எடுக்கப்பட்ட விதத்தையும் உச்சநீதிமன்றம்  தீவிரமாக ஆய்வு  செய்ய வேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் சுதந்திரத்தன்மையை பலவீனப்படுத்தும் வகையில், தேர்தல் ஆணையர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவில் இருந்த, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீக்கப்பட்டு, அவருக்குப் பதிலாகப் பிரதமர் நியமிக்கும் மத்திய அமைச்சரவை அமைச்சர் ஒருவர் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டார்.

இந்த மாற்றம் ரத்து செய்யப்பட்டு, பழைய முறையே கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

உடனடியாக தலைமை தேர்தல் ஆணையர்  ஞானேஷ் குமார் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட்) விடுதலை வலியுறுத்துகின்றன.

இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் வரும் வியாழக்கிழமை (01.10.2026) இடதுசாரி கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான நாடு தழுவிய இந்தப் போராட்டத்தில் அனைத்து பகுதி மக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறோம்." என்று இடதுசாரி கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com