‘நண்பர்களாக இருப்போம்...’ - மாணிக்கம் தாகூர் திடீர் ட்வீட்!

மாணிக்கம் தாகூர் எம்.பி.
மாணிக்கம் தாகூர் எம்.பி.
Published on

தனிநபர்களுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நம் எல்லோரையும் விட கட்சி பெரியது என மாணிக்கம் தாகூர் எம்.பி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த சில வாரங்களில் சட்டமன்றத் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், திமுக தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக – காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.

கடந்த சில மாதங்களாக காங்கிரஸ் தரப்பில் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி உள்ளிட்ட ஒரு தரப்பினர் “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையைத் தொடர்ந்து முன் வைத்து வந்தனர். எனினும், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கைக்கு திமுக தலைமை திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தது. இது குறித்து ஒரு கருத்தரங்கில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்பது சாத்தியமில்லை என்று காங்கிரஸுக்கும் தெரியும், எங்களுக்கும் தெரியும்; கூட்டணியை முறிக்கச் சிலர் முயற்சி செய்கிறார்கள்” என்று பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். இதனால் இரு கட்சிகளிடையே கூட்டணி அமைவதில் இழுபறி நீடிப்பதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வந்தன.

இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மேலிடப் பார்வையாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் திமுகவின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகள், இரண்டு ராஜ்யசபா இடங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் ஆகிய கோரிக்கைகள் காங்கிரஸ் தரப்பில் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதன் தொடர்ச்சியாக, நேற்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினார்.

ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை நிறைவடைய உள்ள நிலையில், திமுக – காங்கிரஸ் இடையிலான கூட்டணி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், “ஆட்சியில் பங்கு” என்ற கோரிக்கையைத் தீவிரமாக வலியுறுத்தி வந்த காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர், இன்று காலை தனது ‘எக்ஸ்’ தளத்தில் முக்கியப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் “தனிநபர்களுக்கு இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் நம் எல்லோரையும் விட கட்சி பெரியது. தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதை கட்டுப்பாட்டுடன் நாம் ஏற்க வேண்டும்.

ஏனெனில் ஒற்றுமையே நமது மிகப்பெரிய பலம். நல்ல நண்பர்களாக இருப்போம்.” என தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் திமுக – காங்கிரஸ் இடையேயானதொகுதிப் பங்கீடு தொடர்பான சர்ச்சைகளுக்கு இன்று முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com