
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை இரு நீதிபதிகள் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு உறுதி செய்துள்ளது.
திருப்பரங்குன்றம் தர்கா அருகே உள்ள நில அளவைக் கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற அனுமதி கோரி ரவிக்குமார் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன், தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை முன்வைத்து தமிழக அரசு, தர்கா அருகே உள்ள தூணில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை.
மேலும் தனிநீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தர்கா நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதிகள், தனி நீதிபதி உத்தரவு செல்லும் என்றும், மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையில் கோயில் நிர்வாகம் தீபத் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. பொது அமைதிகு ஏற்பட்ட பிரச்னைக்கு அரே காரணம் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.