எம். கோபாலகிருஷ்ணனுக்கு விஜயா வாசகர் வட்டத்தின் ‘கி.ரா.’ விருது!

M. Gopalakrishnan
எம்.கோபாலகிருஷ்ணன்
Published on

கோவை விஜயா பதிப்பகத்தின், 'விஜயா வாசகர் வட்டம்' சார்பில், 2026 ஆம் வருடத்திற்கான கி.ரா.விருதுக்கு, எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இது குறித்து கோவை விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் மு.வேலாயுதம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:   

'' ‘நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொண்டவர் கரிசல் இலக்கியத்தின் நாயகர் கி.ராஜநாராயணன். புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராகப் பணியாற்றிய பெருமைக்குரிய இவர் ’கரிசல் வட்டார அகராதி’ யைத் தமிழ் உலகுக்கு தந்த முன்னோடி.

சாகித்ய அகாடமி விருதுக்குப் பெருமை சேர்த்த 'கி.ரா.' வின் நினைவைப் போற்றும் வகையில் கோவை விஜயா பதிப்பகத்தின், விஜயா சாகித்ய அகாடமி வட்டம் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் சிறந்த படைப்பாளிகளுக்கு  'கி.ரா. விருது’ வழங்கப்பட்டு வருகிறது.

விருதுத் தொகையாக ரூபாய் ஐந்து லட்சமும் கேடயமும் வழங்கப்படுகின்றன. இந்த விருதுத் தொகையை சக்தி மசாலா நிறுவனம் வழங்கி சிறப்பிக்கிறது.

2026 ஆம் வருடத்திற்கான ‘கி.ரா.’ விருதுக்கு பிரபல எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

செப்டம்பர் 27 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை காலை கோவை பீளமேடு, பூ.சா.கோ பொறியியல் கல்லூரியில் நடைபெறும் இந்த விருதளிப்பு விழாவில், உச்சநீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் கலந்துகொண்டு சிறப்பிக்க இருக்கிறார்

M. Gopalakrishnan
எம்.கோபாலகிருஷ்ணன்

எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணன் பற்றிய குறிப்பு:

திருப்பூரில் எளிய கைத்தறி நெசவாளர் குடும்பத்தில் பிறந்த எம்.கோபாலகிருஷ்ணன் வணிகவியலிலும் இந்தி இலக்கியத்திலும் முதுகலைப் பட்டம் பெற்றவர்.

கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் இலக்கியத்தின் பல்வேறு வகைமைகளிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தமிழின் முதன்மையான நாவலாசிரியர்களில் ஒருவர்.

அம்மன் நெசவு, மணல்கடிகை, மனைமாட்சி, தீர்த்தயாத்திரை, வேங்கை வனம், மனையறம் ஆகிய ஆறு நாவல்களும் தமிழ் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றவை.

நாவல்களைத் தவிர ஆறு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல் தொகுப்புகள், ஆறு கட்டுரைத் தொகுப்புகள், ஒரு கவிதைத் தொகுப்பு ஆகியன இவரது எழுத்துப் பங்களிப்புகள்.

ஆங்கிலத்திலிருந்தும் இந்தியிலிருந்தும் சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்க்கிறார். ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு பத்து நூல்களையும் இந்தியிலிருந்து தமிழுக்கு ஐந்து நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். சிறுவர்களுக்கான நூல்களை ஆங்கிலத்திலிருந்தும் இந்தியிலிருந்தும் மொழிபெயர்த்துள்ளார்.

‘சொல்புதிது’ காலாண்டிதழின் ஆசிரியராகவும் இருந்துள்ள இவர் தமிழின் இளம் தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புகளை அறிமுகப்படுத்துவதில் முனைப்புடன் செயல்புரிபவர்.

இவரது இலக்கியப் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக விளக்கு விருது, கண்ணதாசன் விருது, ஸ்பேரோ விருது, கதா விருது முதலிய பெருமைமிகு விருதுகளும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன. பொதுக் காப்பீட்டுத் துறையில் பணியாற்றி அண்மையில் ஓய்வு பெற்றிருக்கும் இவர் இப்போது கோவையில் வசித்துவருகிறார்.

'கி.ரா.' விருது :

கடந்த ஆண்டுகளில், கண்மணி குணசேகரன், கோணங்கி, அ.முத்துலிங்கம், எஸ்.வி.ராஜதுரை, நாஞ்சில்நாடன், சு.வேணுகோபால் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இலக்கிய உலகில் தடம் பதித்தவர்களுக்கு 'கி.ரா.' விருது அளிக்கும்  இந்த பெரும் பணியில் எங்களுடன் இணைந்து பணியாற்றி அதற்கு வித்திட்டு சாத்தியப்படுத்திய இலக்கிய ஆர்வலரும், திரைப்படக் கலைஞருமான அன்புச் சகோதரர் சிவகுமாருக்கும், கி.ரா. விருதுத் தொகை வழங்கி சிறப்பித்து வரும்  புரவலர் சக்தி மசாலா நிறுவனர்கள் பி.சி. துரைசாமி - சாந்தி தம்பதியருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.'' என்று மு.வேலாயுதம் கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com