தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது நாளாக இன்றும் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சு வார்த்தைகளில் முனைப்பு காட்டிவருகிறது.
அந்த வகையில், தி.மு.க. தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை விரைவுபடுத்தியுள்ளது.
இந்தக் கூட்டணியில் ஏற்கெனவே கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், சி.பி.எம்., சி.பி.ஐ. ஆகிய கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை உறுதிசெய்யப்பட்ட நிலையில், காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. ஆகிய கட்சிகளுடனான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை இழுபறியிலேயே உள்ளது.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் இரண்டாவது நாளாக இன்று ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். அக்கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றுவரும் இக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன், தொகுதிப் பங்கீட்டுக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு, அமைச்சர் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், ஆர்.ராசா உட்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கூட்டணிக் கட்சிகள் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கை, காங்கிரஸ், வி.சி.க., ம.தி.மு.க. கோரும் தொகுதிகள் பற்றி இதில் அலசப்பட்டுள்ளது என தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.