மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா

மதுரை காமராஜர் பல்கலை பட்டமளிப்பு விழா: பொன்முடி-யின் முடிவுக்கு சி.பி.எம். வரவேற்பு!

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புறக்கணிப்பதாகத் தெரிவித்திருந்த நிலையில், அவரின் முடிவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்றுள்ளது.

இந்திய சுதந்திர போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான சங்கரய்யாவுக்கு மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் கெளரவ டாக்டர் பட்டம் வழங்குவதற்கான பரிந்துரையை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பப்பட்டது.

ஆனால், தமிழக அரசின் பரிந்துரைக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் பட்டமளிப்பு விழாவை புறக்கணிப்பதாக பொன்முடி தெரிவித்துள்ளார்.

அவரின் முடிவை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “அரசமைப்புச் சட்டத்தின் படி செயல்பட வேண்டிய ஆளுநர், ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை மட்டுமே தனது முழு மூச்சாக முன்னெடுத்து வருவதுதான் இந்த மோசமான நிலைக்கு காரணமாகும். என்.சங்கரய்யாவின் தியாகத்தை ஆளுநர் அறிந்திருக்கவில்லை என ஆர்.எஸ்.எஸ் சார்பு ஊடகங்கள் சமாளிப்பாக எழுதிவந்தன. ஆனால், வேண்டுமென்றே இந்த அராஜகத்தில் அவர் ஈடுபட்டு வருவது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்திய கூட்டாட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை மீறிய அதிகாரம் எந்தவொரு தனி நபருக்கும் கிடையாது. எனவே பட்டமளிப்பு விழாவினை புறக்கணிப்பதாக உயர்கல்வித் துறை அமைச்சர் அறிவித்துள்ளது, அரசின் கடுமையான கண்டனச் செய்தியை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு இந்த முடிவினை வரவேற்கிறது.

தமிழ்நாடு அரசின் முடிவுகளுக்கு முட்டுக்கட்டை போட்டுவரும் ஆளுநர், மதுரை காமராசர் பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கச் செல்வது அவமானகரமான ஒன்றாகும். எனவே அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் விதத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தோழர்கள் கருப்புக் கொடியேந்தி கண்டனம் முழங்குவார்கள். தமிழ்நாட்டு மக்கள் இந்த போராட்டத்திற்கு பேராதரவு வழங்கிட வேண்டும்” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com