நூறு நாள் வேலை: விமர்சிக்கும் சீமான்…வேலை கேட்கும் தாயார்!

100 நாள் வேலை கேட்டு பிடிஓ ஆபீஸ் வந்த சீமான் தாயார்
100 நாள் வேலை கேட்டு பிடிஓ ஆபீஸ் வந்த சீமான் தாயார்
Published on

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தயார் நுாறு நாள் வேலை கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் கவனிக்க வைத்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே அரணையூர் கிராம மக்களுக்கு கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 100 நாள் வேலை வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இது தொடர்பாக இளையான்குடி கிராம மக்கள் வட்டார வளர்ச்சி அலுவலரை நேரில் சந்தித்து பணி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இவர்களோடு இக்கிராமத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானின் தாயார் அன்னம்மாளும் 100 நாள் வேலைவாய்ப்பு வழங்குமாறு கேட்டு வந்திருந்தார்.

வட்டார வளர்ச்சி அலுவலர் அரசின் ஒப்புதல் பெறப்பட்டு 100 நாள் வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதனை அடுத்து சீமானின் தாயார் அன்னம்மாள் நாம் தமிழர் கட்சி கொடி கட்டி வந்த பொலேரோ காரில் ஏறி சென்றார்.

நுாறு நாள் வேலைத் திட்டத்தை சீமான் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரின் தாயார் நூறு நாள் வேலை கேட்டு போராடியிருப்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com