பிப்ரவரியில் பொதுக்குழு: கமல் கட்சி தீர்மானம்!
மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு கூட்டம் அடுத்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதிக்குள் கூட்ட வேண்டும் என இன்று நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இப்போதே கட்சிகள் தயாராகத் தொடங்கியுள்ளன. ஏற்கெனவே, களத்தில் உள்ள கட்சிகளுடன் தற்போது விஜய்யின் தவெகவும் மோதவுள்ளதால் சட்டப்பேரவை தேர்தல் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் முன்னிலையில் அக்கட்சியின் நிர்வாகக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் பேரிடர் சோதங்களைக் கட்டுப்படுத்துதல், கட்சியின் விதிமுறைகளை மாற்ற நிர்வாக குழுவுக்கு பொறுப்பு, கலைஞருக்கு நாணயம் வெளியிட்ட மத்திய – மாநில அரசுகளுக்கு நன்றி தெரிவிப்பது உட்பட மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் சில….
எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைத்த வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்த பட்ச ஆதரவு விலையை அமல்படுத்த உடனடியாக சட்ட உத்தரவாதங்களை அளிக்குமாறு மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
மனசாட்சியுடன் தொடர்ந்து வரி செலுத்தும் மாதச் சம்பளம் வாங்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கு மத்திய பட்ஜெட்டில் உரிய சலுகைகள் அளிக்கப்பட வேண்டுமென மத்திய அரசை மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது.
2025 ஆம் வருடம் பிப்ரவரி 9-ஆம் தேதிக்குள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தை நடத்த வேண்டும் என்று நிர்வாகக் குழுவுக்குப் பரிந்துரை செய்யப்படுகிறது. இதன் தொடர்பாக நிர்வாகக் குழு எடுக்கும் அனைத்து முடிவுகளையும் செயற்குழு அங்கீகரிக்கிறது.
மக்களை ஒரு பண்பட்ட நாகரிகச் சமுதாயமாக நடத்துவதற்கான கடமை எல்லா அரசுகளுக்கும் உண்டு. இதற்கு ஊறு விளைவிக்கிற குற்றங்களான, மகளிர்க்கு எதிரான வன்கொடுமைகள் கற்பழிப்பு, போதைப்பொருள் புழக்கம் போன்றவற்றை ஒடுக்க மிகக் கடுமையான சட்டங்களைக் கொண்டு வரவேண்டும். மேற்படி குற்றங்களில் ஈடுபடுபவர் மீது துரிதமான நடவடிக்கைகளை எடுக்கவும், அதிகபட்ச தண்டனைகளை விரைந்து வழங்கவும் சிறப்பு விரைவு நீதிமன்றங்களை அமைக்க மத்திய மாநில அரசுகளை மக்கள் நீதி மய்யத்தின் செயற்குழு வலியுறுத்துகிறது.