மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் சென்னை, காமராசர் அரங்கில் இன்று காலையில் நடைபெற்றது. கட்சித் தலைவர் கமல் ஹாசன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பொதுக்குழு, மாநில நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் மொத்தம் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
“ கட்சியை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வருகிற ஜூன் 25ஆம் தேதிக்குள் குறைந்தது 5000 புதிய உறுப்பினர்களைச் சேர்க்க உறுப்பினர் சேர்க்கை முகாம்களை நடத்தவேண்டும்.
வரவிருக்கும் தேர்தல்களைத் திறம்பட எதிர்கொள்ள பூத் கமிட்டி அத்தியாவசியமான ஒன்று. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும், தலா ஒரு பூத்துக்கு குறைந்தபட்சம் 5 பேர் நியமிக்கப்பட வேண்டும்.” என்பன உட்பட்ட தீர்மானங்கள் முக்கியமானவை.
”ஒரே நாடு ஒரே தேர்தல் எனும் முயற்சி கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது. மாண்புமிக்க ஜனநாயகத்தை மண் கொண்டு புதைக்கும் செயல்.
தேர்தலை ஒரே கட்டமாக நடத்த ஆற்றலற்ற மைய அரசு, ஒரே நேரத்தில் சட்டமன்றத்துக்கும், பாராளுமன்றத்துக்கும் தேர்தல் நடத்தப்போவதாகச் சொல்வது கேலிக்கூத்து.
உலக நாடுகளே வியந்து பார்க்கும் வகையில் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் தேர்தல்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படி சிறப்பாக நடத்தப்பட்டு வருகையில் அந்த அருமையான நடைமுறையை சிதைக்கும் முயற்சிதான் ஒரே நாடு ஒரே தேர்தல். அழகான மாளிகையை சிதைத்துவிட்டு குட்டிச் சுவரைக் கட்டிப்பார்க்கும் முட்டாள்தனமான முடிவுதான் இது.” என்று காட்டமாகவும் ஒரு தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
”ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்குள்ளும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மாநிலக்கட்சிகள் சிறப்பான நல்லாட்சியைக் கொடுக்காமல் இத்தகைய தேர்தல்களை எதிர்கொள்ள முடியாது எனும் கட்டாயம் இருக்கிறது.
ஒரு முறை வாக்குகளைப் பெற்று ஆட்சியில் அமர்ந்துவிட்டால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு மக்களைச் சந்திக்கவே வேண்டியதில்லை எனும் அனுகூலம் மக்கள் நலன்களில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறை மாநிலக் கட்சிகளின் எதிர்காலத்தையும், தேவையையும் இல்லாமல் ஆக்கிவிடக் கூடிய அபாயத்தைக் கொண்டுள்ளது.
பல்வேறு கலாச்சாரங்களும் நம்பிக்கைகளும் பருவ காலங்களும், நில அமைப்பும் கொண்ட பன்மைத்துவ தேசத்தின் ஜனநாயகத்தை ஒற்றைக் கட்சியின் ஆட்சிக்குக் கீழ் கொண்டுவரும் இந்த முயற்சி வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.” என்றும்,
”தேர்தல்களில் போட்டியிடும் வயதை 21 ஆகக் குறைக்க வேண்டும். அரசின் நலத்திட்டங்கள் நலிவடைந்த மக்களை நேரடியாகச் சென்று அடையும்படி ‘அனைவருக்குமான அடிப்படை வருமான அட்டை (Universal Basic Income Card)’ நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். இந்த முறையில் வறிய நிலையில் இருப்பவரைக் கண்டறியவும், அவர்களுக்கு நேரடியாக உதவவும், அரசின் உதவிகள் அந்நபரின் வாழ்விலும் சமூகத்திலும் ஏற்படுத்தும் தாக்கங்களைக் கண்டறியவும், திட்டங்களை வகுக்கவும் இந்த UBI திட்டம் பெரும் பயனளிக்கக் கூடும். மத்திய அரசு நிபுணர்களைக் கொண்டு ஒரு குழுவை உருவாக்கி இதன் சாத்தியங்களை ஆராய்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.” என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.