த.வெ.க. எம்.எல்.ஏ. பாவம்... அவர் இப்படிச் செய்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?

Manickam tagore
மாணிக்கம் தாகூர்
Published on: 

கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்த குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர் சென்னை விமானநிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், அவரை நியாயப்படுத்திப் பேசினார். அங்கு அவர் கூறியதாவது:

"வாட்சாப் உலகத்தில் நாம் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். வாட்சாப்பில் யாராவது ஒருவர் பரப்பிவிட்ட செய்திக்காக நாம் ரியாக்ட் செய்து, ஒருவரைக் குற்றவாளியாக்கி விடுகிறோம்.

வாட்சாப்பில் வெளியான செய்தியை நம்பி, அந்த சட்டமன்ற உறுப்பினரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த முதல் தலைமுறை த.வெ.க. சட்டமன்ற உறுப்பினர், அந்தக் குற்றத்திற்கு மறுப்பு தெரிவித்து, தனது கைப்பேசி, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்யுமாறு கூறுகிறார்.

தவறு நடந்தால் விசாரிக்கலாம் என்பது வேறு; ஆனால், தவறே நடக்காமல் இதுபோன்ற வாட்சாப் செய்திகளை நம்பி விசாரணை நடத்தி, இதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ரியாக்ட் செய்துவிட்டார்கள்.

உதயநிதி போல அருவருக்கத்தக்க வகையில் இவர் பேசவில்லை. உதயநிதி போன்று இவர் ஏதேனும் செய்தார் அல்லது பேசினார் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது? எனவே, இரண்டையும் ஒப்பிட முடியாது." என்று மாணிக்கம் தாகூர் கூறினார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram